search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சரத்பவார் - கவுதம் அதானி சந்திப்பு: எதிர்க்கட்சிகள் மத்தியில் சலசலப்பு
    X

    சரத்பவார் - கவுதம் அதானி சந்திப்பு: எதிர்க்கட்சிகள் மத்தியில் சலசலப்பு

    • சரத்பவார், கவுதம் அதானி சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நடந்தது.
    • இந்த சந்திப்பின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

    மும்பை :

    அமெரிக்காவை சேர்ந்த பங்கு சந்தை ஆய்வு நிறுவனமான 'ஹிண்டன்பர்க்' சமீபத்தில் பிரபல தொழில் அதிபர் கவுதம் அதானியின் நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகளை வெளியிட்டது. அதாவது, அதானி குழும நிறுவனங்கள் தங்களின் நிறுவன பங்கு மதிப்பை உயர்த்தி காட்டி அதிக கடன் பெற்றதாகவும், பங்கு சந்தை மோசடியில் ஈடுபட்டதாகவும், அதானி குடும்பத்தினர் போலி நிறுவனங்கள் தொடங்கி வரி ஏய்ப்பு, பண மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறியிருந்தது.

    இந்த சர்ச்சையை தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் சரிந்தன. உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து கவுதம் அதானி பின்தங்க தொடங்கினார்.

    அதானி நிறுவன குற்றச்சாட்டுகள் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதானி விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுகுழு விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பான விவகாரத்தில் பாராளுமன்றத்தின் 2-வது அமர்வும் முடங்கியது.

    இந்தநிலையில் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் கவுதம் அதானிக்கு ஆதரவாக பேசியது எதிர்க்கட்சிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் அதானி விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை விட சுப்ரீம் கோர்ட்டு கமிட்டி விசாரணையே பயன் அளிக்கும் என்றார். அரசியல் காரணங்களுக்காக கவுதம் அதானி குறிவைக்கப்படுகிறார் என்றும் கூறினார். இது எதிர்க்கட்சிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சிகள் ஒற்றுமைக்காக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை எதிர்க்க மாட்டோம் என்று சரத்பவார் பல்டி அடித்தார்.

    இந்த பரபரப்புக்கு மத்தியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை நேற்று தொழில் அதிபர் கவுதம் அதானி சந்தித்து பேசினார். தென்மும்பையில் உள்ள சரத்பவாரின் 'சில்வர் ஓக்' இல்லத்தில் இந்த சந்திப்பு காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடந்தது. இந்த சந்திப்பின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

    சரத்பவாரை கவுதம் அதானி சுமார் 2 மணி நேரம் சந்தித்து பேசியிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கரை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தபோது, இது மகாராஷ்டிரா எதிர்க்கட்சி கூட்டணியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் தலைவர்களிடம் சரத்பவார் கூறியிருந்தார். இதனால் இனி சாவர்க்கர் பற்றி விமர்சிக்க போவதில்லை என்று காங்கிரசும் தெரிவித்து இருந்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து எதிர்க்கும் கவுதம் அதானியுடன் தற்போது சரத்பவார் சந்திப்பு நடத்தி இருப்பது எதிர்க்கட்சிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×