search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    போலீசாருடன் மோதல்.. ஒருவர் உயிரிழப்பு.. 2 நாட்களுக்கு விவசாயிகள் போராட்டம் நிறுத்தம்
    X

    போலீசாருடன் மோதல்.. ஒருவர் உயிரிழப்பு.. 2 நாட்களுக்கு விவசாயிகள் போராட்டம் நிறுத்தம்

    • விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.
    • விவசாயிகளை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டன.

    வேளாண் விலை பொருட்களின் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், கடன் தள்ளுபடி, உள்ளிட்ட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி செல்லும் போராட்டத்தை கடந்த 13-ந்தேதி தொடங்கினர்.

    பஞ்சாபில் இருந்து புறப்பட்ட விவசாயிகள் பஞ்சாப்-அரியானா இடையே ஷம்பு எல்லையிலும் கனாரி எல்லையிலும் தடுத்து நிறுத்தப்பட்டனர். விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. விவசாயிகளை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

    போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாய சங்க நிர்வாகிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நான்கு முறை நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அதன்படி விவசாயிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆயத்தமாகினர்.

    டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தை தொடங்கும் விதமாக ஹரியானா, பஞ்சாப் எல்லையில் ஆயிரக்கணக்கான டிராக்டர்களுடன் போலீசாரின் தடுப்புகளை அகற்ற விவசாயிகள் ஜே.சி.பி. இயந்திரங்களுடன் புறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையில் பயங்கர மோதல் நடந்தது. அதில் 3 விவசாயிகள் படுகாயம் அடைந்தனர். படுகாயமுற்ற விவசாயிகள் பாட்டியாலா ராஜிந்திரா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

    சிகிச்சை பலனின்றி ஒரு விவசாயி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். உயிரிழந்தவர் பஞ்சாப் மாநிலத்தின் பதிண்டா மாவட்டத்தை சேர்ந்த 21-வயகான சுப்கரன் சிங் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயி ஒருவர் உயிரிழந்த நிலையில், 5-ம் கட்ட பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள விவசாய சங்கங்களுக்கு மத்திய வேளாண் மந்திரி அர்ஜுன் முண்டா அழைப்பு விடுத்துள்ளார்.

    பஞ்சாப்-அரியானா எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயி சுப்கரன் சிங் உயிரிழந்ததை தொடர்ந்து போராட்டம் இரண்டு நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக விவசாய சங்க தலைவர்கள் அறிவித்தனர்.

    Next Story
    ×