என் மலர்
இந்தியா

சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ததை விமர்சிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு: உச்சநீதிமன்றம்
- மாநிலம் அரசு எடுக்கும் முடிவை விமர்சிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு.
- மற்ற நாடுகள் சுதந்திர தினத்தை கொண்டாடும்போது, வாழ்த்து தெரிவிக்கவும் உரிமை உண்டு.
மத்திய அரசு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது. இந்த முடிவை மகாராஷ்டிரா மாநிலத்தில வேலைப்பார்த்து வந்த ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர் ஜாவித் அகமது விமர்சித்திருந்தார்.
அவர் இது தொடர்பாக தனது வாட்ஸ்அப் பக்கத்தில் "ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ நீக்கப்பட்ட ஆகஸ்டு 5-ந்தேதி ஜம்மு-காஷ்மீரின் கருப்பு தினம், ஆகஸ்டு 14 பாகிஸ்தான் சுதந்திர தின வாழ்த்துகள்" எனப் பதிவிட்டிருந்தார்.
இதனால் அவர் மீது மகாராஷ்டிர மாநில அரசு இரு பிரிவினருக்கு இடையே மோதலை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மும்பை உயர்நீதிமன்றம் அவர் மீதான வழக்கு தள்ளுபடி செய்ய மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அப்போது உச்சநீதிமன்றம் "ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது மற்றும் மாநிலங்கள் எடுக்கும் முடிவை விமர்சனம் செய்ய ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு. அதேபோல் மற்ற நாடுகள் அதனுடைய சுதந்திர தினத்தை கொண்டாடும்போது, அந்த நாட்டிற்கு சுதந்திர தின வாழ்த்துகள் கூறம் உரிமையும் உண்டு" எனத் தெரிவித்து ஜாவித் அகமதுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.






