search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் வழங்க வாய்ப்பு இல்லை: டி.கே.சிவக்குமார்
    X

    தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் வழங்க வாய்ப்பு இல்லை: டி.கே.சிவக்குமார்

    • தென்மேற்கு பருவமழை கர்நாடகத்தில் இன்னும் பெய்யவில்லை.
    • மேகதாது திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இல்லை.

    பெங்களூரு :

    கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மத்திய மந்திரிகளை நேரில் சந்திக்கும் நோக்கத்தில் டெல்லி சென்றுள்ளார். அங்கு ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திர ஷெகாவத்தை அவர் நேரில் சந்தித்து, நிலுவையில் உள்ள கர்நாடக நீர்ப்பாசன திட்டங்களுக்கு அனுமதி வழங்குமாறு கோரினார். மேகதாது திட்டத்திற்கும் ஒப்புதல் வழங்க கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே டி.கே.சிவக்குமார் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தென்மேற்கு பருவமழை கர்நாடகத்தில் இன்னும் பெய்யவில்லை. அதனால் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) உள்பட பெரும்பாலான அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளன. பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. காவிரி நிர்வாக ஆணையம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடும்படி உத்தரவிட்டுள்ளது. ஆனால் போதிய நீர் இருப்பு இல்லாததால் தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறக்க சாத்தியமில்லை. இந்த முறை தண்ணீர் வழங்க வாய்ப்பு இல்லை.

    அனைத்து மாநில நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் மாநாடு கர்நாடகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாடு வருகிற 8 அல்லது 9-ந் தேதி நடைபெற வாய்ப்புள்ளது. மேகதாது திட்டம் குறித்து சட்டத்துறை நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி எனது கருத்தை தெரிவிக்கிறேன்.

    இந்த திட்டம் எந்த அளவுக்கு காலதாமதம் ஆகிறதோ அந்த அளவுக்கு திட்ட மதிப்பீடு அதிகரிக்கும். இதனால் மாநில அரசுக்கு நஷ்டம் ஏற்படும். ரூ.9 ஆயிரம் கோடியாக இருந்த இந்த திட்டத்தின் மதிப்பு தற்போது ரூ.13 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. இதற்கிடையே தமிழ்நாட்டினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

    நன்றாக மழை பெய்யும்போது காவிரி ஆற்றில் 700 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) கடலுக்கு சென்று கலந்துள்ளது. அதில் நாம் பயன்படுத்த திட்டமிட்டு இருப்பது 40 டி.எம்.சி. மட்டுமே. மேகதாது திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இல்லை. இதுகுறித்து அந்த மாநிலத்திற்கு விவரிக்க முயற்சி செய்கிறோம். அரசியலை தாண்டி இந்த விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டியுள்ளது.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    Next Story
    ×