search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதி கோவில் சன்னதியில் பக்தர்களை பிடித்து தள்ளுகிறார்கள்: குறைகள் கேட்பு நிகழ்ச்சியில் புகார்
    X

    பக்தர்களிடம் இருந்து குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடந்தபோது எடுத்தபடம்.

    திருப்பதி கோவில் சன்னதியில் பக்தர்களை பிடித்து தள்ளுகிறார்கள்: குறைகள் கேட்பு நிகழ்ச்சியில் புகார்

    • திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு தங்குமிடம் மற்றும் தரிசன ஏற்பாடு செய்வது தேவஸ்தானத்தின் கடமையாகும்.
    • 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தரிசனத்துக்கு அழைத்துச் செல்லலாம்.

    திருமலை :

    திருமலையில் உள்ள அன்னமயபவனில் நேற்று காலை பக்தர்களிடம் இருந்து தொலைப்பேசி மூலமாக குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்று பக்தர்கள் தெரிவித்த குறைகள், ேகட்ட ேகள்விகள், ஆலோசனைகள் ஆகியவற்றுக்கு பதில் அளித்து பேசினார்.

    பக்தர்கள் தெரிவித்த குறைகள், கேட்ட கேள்விகளுக்கு, முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி அளித்த பதில்கள் விவரம் வருமாறு:-

    வீராரெட்டி, ஐதராபாத்: திருமலையில் தங்கும் அறைகள் போதிய எண்ணிக்கையில் இல்லை. அறைகள் வாங்குவதற்கு மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டி உள்ளது. அறைகளில் சூடான தண்ணீர் இல்லை?

    அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி: திருமலையில் 7 ஆயிரம் அறைகள் உள்ளன. கொரோனா பரவலுக்கு பின் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவதால், காலியானப் பிறகு வேறு ஒருவருக்கு ஒதுக்கப்படும். செப்டம்பர் மாதத்துக்குள் திருமலையில் உள்ள அனைத்துத் தங்கும் விடுதிகளிலும் கீசர் பொருத்துவோம்.

    தினேஷ், விஜயவாடா: அஸ்வினி மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்ய ஏற்பாடு செய்தால், பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், பிரம்மோற்சவ விழா நாட்களில் காணிக்கையாளர்களுக்கு சாமி தரிசன ஏற்பாடு செய்து கொடுங்கள்?

    அதிகாரி: திருப்பதி சுவிம்ஸ் மருத்துவமனையில் டயாலிசிஸ் பிரிவு உள்ளது. திருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனையிலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பிரம்மோற்சவ விழா, புரட்டாசி மாதத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் அனைத்து விதமான தரிசனமும் ரத்து செய்யப்படுகிறது.

    ஸ்ரீகாந்த், மாஞ்சேரியாலா: திருப்பதியில் உள்ள கோவிந்தராஜசாமி கோவிலில் அர்ச்சகர்கள் பணம் கேட்கின்றனர். கொடுக்கவில்லை என்றால் தள்ளுகிறார்கள். எங்கள் கிராமத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான வெங்கடேஸ்வரசாமி கோவிலை புனரமைப்பு செய்கிறோம். திருப்பதி தேவஸ்தானம் எங்களுக்கு உதவ முடியுமா? மேலும் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பாதுகாப்பு அதிகாரிகளின் நடத்தை சரியில்லை?

    அதிகாரி: திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட கோவில்களில் அர்ச்சகர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம். யாரேனும் பணம் கேட்டால் நடவடிக்கை எடுப்போம். திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் உள்ள விமான கோபுரம் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. எனவே பாலாலயத்தில் சாமி தரிசனம் செய்யலாம். மேலும் உங்கள் கிராமத்தில் உள்ள அறக்கட்டளை மூலம் வெங்கடேஸ்வரசாமி கோவிலை நவீனப்படுத்தலாம். உங்கள் கோவில் திருப்பதி தேவஸ்தான விதிமுறைகளின்படி இருந்தால், நாங்கள் சிலைகள் மற்றும் உற்சவ சிலைகளை வழங்குவோம். அதேபோல் விதிமுறைகளை பின்பற்றி ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஜான்சி, ஐதராபாத்: இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சப்தகிரி மாத சந்தா செலுத்தி உள்ளோம். இன்னும் கிடைக்கவில்லை?

    அதிகாரி: சப்தகிரி மாத இதழ் மிகவும் கவர்ச்சிகரமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆன்லைனிலும் வாசகர்களுக்குக் கிடைக்கச் செய்துள்ளோம். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்.

    சுரேஷ்குமார், கல்வகுர்த்தி: சாமி தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்துவிட்டு திருமலைக்கு வந்து வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் காத்திருந்தால், அங்குள்ள ஊழியர்கள் பணத்தை வாங்கிகொண்டு பக்தர்களை நமக்கு முன்னால் உள்ள கம்பார்ட்மெண்டில் அமர வைத்தார்கள்?

    அதிகாரி: வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள கம்பார்ட்மெண்டுகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்போம்.

    பரசுராம், மேற்கு கோதாவரி: தங்கும் விடுதிக்கு முன்பதிவு செய்துவிட்டு திருமலைக்கு வரவில்லை என்றால், ரத்து செய்ததற்கான பணத்தைத் திரும்பப் பெற முடியுமா?

    அதிகாரி: நீங்கள் தங்குமிடம் மற்றும் சேவையை ரத்து செய்து, முன்கூட்டியே எங்களுக்குத் தெரிவித்தால், நாங்கள் பணத்தைத் திருப்பித் தருவோம்.

    மல்லிகார்ஜுன்ரெட்டி, திருப்பதி: திருப்பதியில் தேவஸ்தானம் நடத்தும் பாலமந்திர் பள்ளிக் கூடத்தில் தாய், தந்தை இல்லாத குழந்தைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. அதில் தாய் அல்லது தந்தை இல்லாவிட்டாலும் அந்தக் குழந்தைகளுக்கு அனுமதி கொடுக்க முடியுமா?

    அதிகாரி: பரிசீலித்து உரிய முடிவு எடுப்போம்.

    சீனிவாசராவ், ஐதராபாத்: திருமலையில் உள்ள சப்தகிரி விருந்தினர் மாளிகையில் தங்கி சாமி தரிசனம் செய்து விட்டு, அறைகளை காலி செய்து விட்டு வெளியே வரும்போது, அங்குள்ள ஊழியர்கள், பக்தர்களிடம் பணம் கேட்கின்றனர். உரிய நடவடிக்கை எடுக்க முடியுமா?

    அதிகாரி: திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு தங்குமிடம் மற்றும் தரிசன ஏற்பாடு செய்வது தேவஸ்தானத்தின் கடமையாகும். இதுபோன்ற பிரச்சினைகளை கட்டுப்படுத்த பறக்கும் படை துறை உள்ளது. இதுவரை 142 வழக்குகள் பதிவு செய்து, 217 பேரை கைது செய்து, 1400-க்கும் மேற்பட்டோரை திருமலைக்கு வர தடை விதித்துள்ளோம். 182 தேவஸ்தான ஊழியர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருமலையில் பறக்கும்படை துறை வலுவாக உள்ளது. தேவஸ்தான ஊழியர்களுக்கு பக்தர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து சுவேத பவனில் சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறோம்.

    வெங்கடபதிசாஸ்திரி, ஐதராபாத்: 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான தரிசனம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முதல் மாடியில் தங்கும் வசதியை சாப்ட்வேரில் மாற்ற முடியுமா?

    அதிகாரி: பரிசீலனை செய்கிறோம்.

    சாவித்திரி, பட்டிகொண்டா: எலக்ட்ரிக் டிப் மூலம் சேவை டிக்கெட்டை பெற்றோம். குழந்தைகளை அழைத்து வரலாமா?

    அதிகாரி: 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தரிசனத்துக்கு அழைத்துச் செல்லலாம். ஆனால் தோமாலா, அர்ச்சனை, அபிஷேகம் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை.

    மாரிமுத்து, சென்னை: கோவிலில் பச்சிளம் குழந்தைகளை தோளில் சுமந்து செல்வதால் பின்னால் இருப்பவர்கள் சாமி தரிசனம் சரியாக செய்ய முடியவில்லை. ஏழுமலையான் கோவில் மூலவர் சன்னதியில் ஊழியர்கள் பக்தர்களை பிடித்து தள்ளுகிறார்கள்?

    அதிகாரி: கோவிலில் குழந்தைகளை தோளில் சுமந்து வருவதை தடுக்க, ஊழியர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். ஏராளமான பக்தர்கள் வெளியில் மணிக்கணக்கில் காத்திருப்பதால், விரைந்து வந்து ஏழுமலையானை தரிசனம் செய்யவும். வெளியில் உள்ள பக்தர்களுக்கு தரிசனத்துக்கு வாய்ப்பு அளிக்க வேண்டி உள்ளது. கோவில் ஊழியர்களுக்கு உதவுங்கள்.

    ரமணகுமார், விஜயநகரம்: அபிஷேகத்துக்கு 2004-ம் ஆண்டு பணம் வசூலித்தால், 2021-ம் ஆண்டு கிடைக்கும். கொரோனா காரணமாக அது ரத்து செய்யப்பட்டது. மீண்டும் அபிஷேக டிக்கெட் கொடுக்க முடியுமா?

    அதிகாரி: அபிஷேக டிக்கெட்டுகள் 2050-ம் ஆண்டு வரை பக்தர்களால் முன்பதிவு செய்யப்படுகின்றன. அபிஷேக சேவையை 150 பேர் மட்டுமே காண முடியும். எனவே ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் திருமலையில் லக்கி டிப் மூலம் 10 டிக்கெட்டுகள் ஒதுக்கப்படுகின்றன. வியாழக்கிழமை காலை உங்கள் பெயரை பதிவு செய்தால் டிக்கெட் பெறலாம்.

    மேற்கண்டவாறு பக்தர்கள் கேட்ட கேள்விகள், தெரிவித்த குறைகளுக்கு அதிகாரி பதில் அளித்தார்.

    Next Story
    ×