என் மலர்
இந்தியா

ஆந்திராவில் பஸ்கள் ஓடவில்லை; கடையடைப்பு- தமிழக எல்லையில் வாகனங்கள் நிறுத்தம்
- வாகனங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டதோடு, ஆந்திரா முழுவதிலும் கடைகள் அடைக்கப்பட்டு முழு பந்த் நடந்தது.
- ரெயில் போக்குவரத்து சேவை மட்டும் தொடர்ந்து நடைபெற்றதால், ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
திருப்பதி:
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து தெலுங்கு தேச கட்சியினர் கண்டன ஊர்வலங்கள், சாலை மறியல், தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டனர். உருவ பொம்மைகளை தீயிட்டு கொளுத்தினர்.
மேலும் வாகனங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டதோடு, ஆந்திரா முழுவதிலும் கடைகள் அடைக்கப்பட்டு முழு பந்த் நடந்தது.
மாநிலம் முழுவதிலும் லாரிகள் ஊர்களின் எல்லையில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நிறுத்தப்பட்டன. மாநிலம் முழுவதிலும் பஸ், லாரி, கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ரெயில் போக்குவரத்து சேவை மட்டும் தொடர்ந்து நடைபெற்றதால், ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஆந்திர எல்லைகளில் நிறுத்தப்பட்ட பஸ்களில் இருந்து பயணிகள் இறங்கி தங்கள் ஊருக்கு பல கிலோ மீட்டர் நடந்தே கடும் சிரமத்துடன் சென்றனர்.
ஆந்திராவில் முழு கடையடைப்பு காரணமாக ஆந்திர, மாநில எல்லையான திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட எல்லைகளில் வாகனங்கள் வரிசை கட்டி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் இருந்து வேலூர் வழியாக திருப்பதி, காளஹஸ்தி, உள்பட ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் 160 பஸ்கள் வேலூரில் நிறுத்தி வைக்கப்பட்டன.
இதேபோல திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் நிறுத்தப்பட்டன.
தனியார் பஸ்கள் மட்டும் தமிழக ஆந்திர எல்லை வரை இயக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலும் தென் மாவட்டங்களில் இருந்து திருப்பதி செல்லும் பக்தர்கள் வேலூர் வழியாக செல்கின்றனர். சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதால் அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டு உள்ளது.
இதனால் திருப்பதி செல்ல வேலூர் வந்த பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர். காட்பாடி ரெயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
ரெயில் மூலம் திருப்பதி செல்வதா அல்லது வீட்டுக்கு திரும்பி செல்வதா என குழப்பத்தில் தவித்தனர்.






