search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாப்புலர் பிரண்ட் அமைப்பு தடை செய்யப்படுகிறது?- மத்திய அரசு தீவிர ஆலோசனை
    X

    பாப்புலர் பிரண்ட் அமைப்பு தடை செய்யப்படுகிறது?- மத்திய அரசு தீவிர ஆலோசனை

    • பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் இருந்து கோரிக்கை விடப்பட்டு உள்ளது.
    • பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    புதுடெல்லி:

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சதி திட்டங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து நேற்று 15 மாநிலங்களில் உள்ள அந்த அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

    தேசிய புலனாய்வு முகமையும், அமலாக்கத்துறையும் இணைந்து நடத்திய இந்த சோதனை நாடு முழுவதும் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்தது.

    இந்த சோதனையை தொடர்ந்து 106 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் 11 பேர் கைதாகி இருக்கிறார்கள். இவர்களை டெல்லியில் வைத்து தீவிர விசாரணை நடத்த என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்த சோதனையின்போது ஏராளமான ஆவணங்கள், கம்ப்யூட்டர்கள், செல்போன்கள் மற்றும் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறார்கள். அதன் அடிப்படையிலும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் இருந்து கோரிக்கை விடப்பட்டு உள்ளது. உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

    ஏற்கனவே பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக அந்த அமைப்பு செய்து வரும் சட்ட விரோத செயல்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகளும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் தொகுத்து உள்ளனர்.

    இவற்றின் அடிப்படையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பை நாடு முழுவதும் தடை செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு வளைகுடா நாடுகளில் நெட் வொர்க் அமைத்து மிகப்பெரிய அளவில் பல கோடி ரூபாய் நிதி திரட்டி இருப்பதை அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டு பிடித்து உள்ளனர். இதற்கான ஆதாரங்கள் தொகுக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக 2009-ம் ஆண்டு முதல் வளைகுடா நாடுகளில் இருந்து 60 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் பெறப்பட்டுள்ளது.

    அதுபோல இந்திய மறுமலர்ச்சி கழகம் என்ற அமைப்பின் மூலம் ரூ.58 கோடிக்கு மேல் பணம் பெறப்பட்டுள்ளது. 23 வங்கி கணக்குகளில் இவை கையாளப்பட்டு உள்ளன. இவை அனைத்தையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளின் கணக்குகளில் இருக்கும் பணம் பிறகு தனி நபர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

    சதி திட்டத்தின் அடிப்படையில் இந்த பண பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றம்சாட்டி உள்ளனர். யார், யாருக்கு பணம் சென்றிருக்கிறது என்ற தகவல்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சேகரித்து உள்ளனர்.

    நாடு முழுவதும் சுமார் 2,600 பேருக்கு இந்த வகையில் பண பரிமாற்றம் நடந்துள்ளது. அவர்கள் மூலம் பா.ஜனதா ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.

    இதற்காக வளைகுடா நாடுகளில் பயிற்சியும் அளிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது. அபுதாபி, குவைத், ஜெட்டா நகரங்களில் சுமார் 2 ஆயிரம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த பயிற்சி பெற்றதாக அமலாக்கத்துறை கூறி உள்ளது.

    அமலாக்கத்துறை போல தேசிய புலனாய்வு முகமை அமைப்பும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை பதிவு செய்து உள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பில் உறுப்பினராக இருப்பவர்கள் தெலுங்கானா மாநிலத்தில் தீவிரவாத முகாம்களை நடத்தியதாக என்.ஐ.ஏ. குற்றம்சாட்டி உள்ளது. பிரதமர் மோடி உயிருக்கு குறி வைத்ததாகவும் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

    தமிழ்நாடு, கர்நாடகாவில் நடந்த சில கொலைகளுக்கு இந்த அமைப்பை சேர்ந்தவர்களே காரணம் என்றும் என்.ஐ.ஏ. கூறி உள்ளது. சமீபத்தில் கர்நாடகாவில் நடந்த கலவரத்துக்கும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உறுப்பினர்களே மூலக்காரணம் என்றும் என்.ஐ.ஏ. தெரிவித்து உள்ளது.

    கேரளாவில் வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களை கையாளுவது பற்றி மிகப்பெரிய பயிற்சி அளிக்கப்பட்டதாக என்.ஐ.ஏ. தெரிவித்து உள்ளது. கன்னூர் மாவட்டத்தில் ஆயுதப்பயிற்சி நடந்ததாக கூறி உள்ளது.

    இப்படி அமலாக்கத்துறையும், என்.ஐ.ஏ. அதிகாரிகளும் தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் தொகுக்கப்பட்டு உள்ளன. இவற்றை காரணம் காட்டி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு நிரந்தரமாக தடை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×