என் மலர்
இந்தியா

சிந்தாமணியில் பள்ளி மாணவன் மீது தாக்குதல்: கல்வித்துறை அதிகாரி உள்பட 6 பேர் மீது வழக்கு
- வட்டார கல்வித்துறை அதிகாரியிடம் சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிந்தாமணி:
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா முருகமலா பேரூராட்சி யாகவகேட் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜ். இவரது மனைவி அஞ்சலி. இவர்களது மகன் யஷ்வந்த் (வயது 8). இவன் யாகவகேட் கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 3-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்தநிலையில், யஷ்வந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்றான். அங்கு ஆசிரியை சரஸ்வதம்மா யஷ்வந்தை குச்சியால் தாக்கி உள்ளார்.
இதில், குச்சி அவனது கண்ணில் பட்டதாக கூறப்படுகிறது. இதனால் யஷ்வந்தின் வலது கண்ணில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து மாணவன் பெற்றோரிடம் கூறினான். இதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பெற்றோர் யஷ்வந்தை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் பெற்றோர் யஷ்வந்துடன் அரசு பள்ளிக்கூடத்திற்கு வந்தனர்.
அங்கு இதுகுறித்து ஆசிரியையிடம் கேட்டனர். அப்போது அவர் எந்தவித பதிலும் கூறவில்லை என தெரிகிறது. இதனால் கோபமடைந்த நடராஜ் தனது மனைவி அஞ்சலியுடன் பட்லஹள்ளி போலீஸ் நிலையத்தில் மகனை தாக்கிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். ஆனால் போலீசார் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
இதையடுத்து வட்டார கல்வித்துறை அதிகாரியிடம் சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டது. அவரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்த நடராஜ், மனைவி, மகன் யஷ்வந்துடன் சேர்ந்து அரசு ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்லஹள்ளி போலீஸ் நிலையம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த முன்னாள் எம்.எல்.ஏ கிருஷ்ணய்யா ரெட்டி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். பின்னர் போலீசாருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். அதேபோல், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசிடம் கிருஷ்ணய்யா வலியுறுத்தினார். இந்தநிலையில், மாணவனை தாக்கியதாக சரஸ்வதம்மா மற்றும் அரசு ஆசிரியர் சங்க தலைவர் அசோக், ஆசிரியர்கள் நாராயணசாமி, ஸ்ரீராமரெட்டி, வெங்கடராமன ரெட்டி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், மாணவனை தாக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத வட்டார கல்வி துறை அதிகாரி உமாதேவி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.