என் மலர்
இந்தியா

ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: ஏற்பாடுகள் தீவிரம் - நாளை வாக்குப்பதிவு
- ராஜஸ்தானில் பலத்த பாதுகாப்புடன் நாளை சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
- ஆளும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ராஜஸ்தானில் நாளை சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மொத்தமுள்ள 200 தொகுதிகளில் கரண்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் குர்மித் சிங் கூனார் உயிரிழந்ததை அடுத்து, மீதமுள்ள 199 தொகுதிகளுக்கு மட்டும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இங்கு ஆளும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது. மாநிலம் முழுதும் பல்வேறு இடங்களில் இறுதிக்கட்டமாக நடந்த பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.
இந்த சட்டசபை தேர்தலில் 183 பெண்கள் உட்பட 1,875 பேர் போட்டியிடுகின்றனர். 5.25 கோடி பேர் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற உள்ளனர்.
வாக்குப்பதிவு காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடக்கிறது. இதையொட்டி, மாநிலம் முழுதும் உள்ள 51,756 வாக்குச்சாவடிகளில் உள்ளூர் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்பட உள்ளது.






