என் மலர்
இந்தியா

பா.ஜ.க மாநில துணைத்தலைவர் வீட்டின் முன் வெடிபொருளை வீசிச்சென்ற மர்மநபர்கள்- வெடித்து சிதறியதால் பரபரப்பு
- வெடிபொருள் வீசப்பட்ட தகவலறிந்ததம், சம்பவ இடத்தில் ஏராளமான பாஜக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டனர்.
- போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநில பாஜக கட்சியின் துணைத் தலைவர் ஷோபா சுரேந்திரன். பாஜகவின் கேரள மாநில முன்னாள் தலைவராக இருந்த சுரேந்திரனின் மனைவி ஆவார். இவர்களது வீடு திருச்சூர் அய்யந்தோல் பகுதியில் இருக்கிறது.
இவர்களது வீட்டின் அருகே நேற்று இரவு ஏதோ வெடிபொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 மர்ம நபர்கள், வெடிபொருளை வீசியுள்ளனர். இதனால் பயங்கர வெடிச் சத்தம் கேட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது
வெடிபொருள் வீசப்பட்டபோது ஷோபா சுரேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டுக்குள் இருந்தனர். அவர்கள் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்த போது வெடிபொருள் வீசப்பட்டதை அறிந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் உதவி கமிஷனர் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர். ஷோபா சுரேந்திரன் வீட்டின் அருகே வீசப்பட்ட வெடிபொருள் எந்த வகையை சேர்ந்தது? என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதனை வீசியது யார்? எதற்காக வீசினார்கள்? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வெடிபொருளை வீசிச் சென்ற மர்மநபர்களை அடையாளம் காணுவதற்காக அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருக்கும் வீடியோ காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
ஷோபா சுரேந்திரன் வீடு அருகே வெடிபொருள் வீசப்பட்ட தகவலறிந்ததம், சம்பவ இடத்தில் ஏராளமான பாஜக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டனர். சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.






