என் மலர்
இந்தியா

பீகார் தேர்தலில் மோசடி செய்யப்பட்டது.. ஆனால் - பிரசாந்த் கிஷோர் நேர்காணல்
- ஒரு அரசாங்கம் இவ்வளவு பெரிய அளவில் பீகாரிலோ அல்லது இந்தியாவில் வேறு எங்கும் பணத்தை விநியோகிப்பதை நான் இதற்கு முன் பார்த்ததில்லை.
- பெயரறியாத சில கட்சிகள் கூட லட்சக்கணக்கான வாக்குகளைப் பெற்றதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன சூராஜ் கட்சி மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 238 தொகுதிகளில் போட்டியிட்டது.
ஆனால், ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. கட்சிக்குக் கிடைத்த மொத்த வாக்கு சதவீதம் வெறும் 2-3% மட்டுமே. அத்துடன் பெரும்பாலான வேட்பாளர்கள் தங்கள் டெபாசிட் தொகையையும் இழந்தனர்.
இந்நிலையில் அங்கில தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய பிரசாந்த் கிஷோர், தேர்தல் முடிவுகளில் மிகப்பெரிய அளவில் மோசடி செய்யப்பட்டதுபோல் தோன்றுகிறது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தற்போது எந்தத் திடமான ஆதாரமும் இல்லை என்று தெரிவித்தார்.
மாதக்கணக்கில் அவர் மேற்கொண்ட ஜன சூராஜ் யாத்திரையின்போது தனது குழு சேகரித்த கள ஆய்வுக் கருத்துகளுக்கும், உண்மையான வாக்குப் பதிவின் போக்குகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்த அவர், இதன் மூலம், தேர்தல் நடைமுறையில் ஏதோ தவறு நிகழ்ந்துள்ளது என்று சந்தேகம் தெரிவித்தார்.
சில வெல்ல முடியாத சக்திகள் தேர்தல் முடிவுகளைப் பாதித்ததாகவும், பெயரறியாத சில கட்சிகள் கூட லட்சக்கணக்கான வாக்குகளைப் பெற்றதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கையாளுதல் குறித்து சந்தேகம் இருந்தபோதும் தற்போது இவை ஆதாரம் இல்லாத வெறும் குற்றச்சாட்டுகளாகவே உள்ளன என்று தெரிவித்தார்.
மேலும் என்டிஏ அரசு சார்பில் தேர்தலுக்கு முன் ஒன்றரை கோடி பெண்கள் வங்கிக் கணக்குக்கு ரூ.10,000 விநியோகம் செய்யப்பட்டது குறித்து விமர்சித்த அவர், ஒரு அரசாங்கம் இவ்வளவு பெரிய அளவில் பீகாரிலோ அல்லது இந்தியாவில் வேறு எங்கும் பணத்தை விநியோகிப்பதை நான் இதற்கு முன் பார்த்ததில்லை என்று தெரிவித்தார்.






