என் மலர்
இந்தியா

திருப்பதி அலிபிரி நடைபாதையில் கரடி நடமாட்டம்: பக்தர்கள் அச்சம்
- கரடி நீண்ட நேரம் நடைபாதையிலேயே சுற்றிச்சுற்றி வந்தது.
- கரடி நடமாடிய இடத்தில் வனத்துறையினர் கூடுதலாக ‘ட்ராப்’ கேமராக்களை பொருத்தி உள்ளனர்.
திருமலை:
திருப்பதி அலிபிரி நடைபாதையில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளன. தற்போது சிறுத்தை நடமாட்டம் பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், கரடி நடமாட்டமும் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அலிபிரி நடைபாதையில் 7-வது மைலில் நேற்று முன்தினம் இரவு 11.45 மணியில் இருந்து 12.30 மணி இடையே கரடி ஒன்று நடமாடியதைப் பக்தர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அந்தக் கரடி நீண்ட நேரம் நடைபாதையிலேயே சுற்றிச்சுற்றி வந்தது.
இதுகுறித்து பக்தர்கள் திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை ஊழியர்களுக்கும், வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வருவதற்குள் கரடி மெல்ல நகர்ந்து வனப்பகுதிக்குள் சென்று விட்டது.
கரடி நடமாடிய இடத்தில் வனத்துறையினர் கூடுதலாக 'ட்ராப்' கேமராக்களை பொருத்தி உள்ளனர். கரடியை பிடிக்க வனத்துறையினர் தனிப்படை அமைத்து, தீவிர தேடுதல் பேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பதி அலிபிரி நடைபாதையில் சிறுத்தைகள், கரடிகள் நடமாட்டத்தால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.






