search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பெங்களூருவில் 2039-ம் ஆண்டில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்: அதிர்ச்சி தகவல்
    X

    பெங்களூருவில் 2039-ம் ஆண்டில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்: அதிர்ச்சி தகவல்

    • பெங்களூருவில் நாளுக்கு, நாள் நகரில் மக்கள் தொகை அதிகரித்து கொண்டே செல்கிறது.
    • வீடுகள் எண்ணிக்கையும் பெருகி வருகிறது.

    பெங்களூரு:

    தகவல் தொழில்நுட்ப நகரம், பூங்கா நகரம் உள்பட பல்வேறு புனைப்பெயர்களால் பெங்களூரு அழைக்கப்பட்டு வருகிறது. இங்கு நிலவும் சீதோஷ்ண நிலை மற்றும் குவிந்து கிடக்கும் தொழில்களால் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் பெங்களூருவில் அதிகளவில் வசித்து வருகின்றனர். இதனால் நாளுக்கு, நாள் நகரில் மக்கள் தொகை அதிகரித்து கொண்டே செல்கிறது.

    இதன்காரணமாக நகரில் வீடுகள் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. அந்த வீடுகளுக்கு பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் சார்பில் காவிரி தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காவிரி ஆற்றில் இருந்து தினமும் 1,470 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு நகரில் 10½ லட்சம் குடிநீர் இணைப்புகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெங்களூருவில் 2039-ம் ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக குடிநீர் மற்றும் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பெங்களூரு நகரில் தினமும் 500-க்கும் மேற்பட்ட வெளிமாநில கூலி தொழிலாளர்கள் வீடுகள் அமைத்து வருகின்றனர். நகரில் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 29 லட்சத்து 5 ஆயிரத்து 233 வீடுகள் இருந்தன. தற்போது வீடுகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. நகர மக்களுக்கு தினமும் 2,100 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.

    தண்ணீர் கிடைக்காதவர்கள் தங்களது வீடுகளில் சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் எடுத்து வருகின்றனர். இதனால் வருகிற 2030-ம் ஆண்டே பெங்களூருவில் குடிநீர் பிரச்சினை தலைதூக்கும். 2039-ம் ஆண்டு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். தற்போது பெங்களூருவில் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள 110 கிராமங்களுக்கும் தண்ணீர் வினியோகிக்க வேண்டி உள்ளது.

    இந்த கிராமங்களுக்கு குடிநீர் வினியோகிக்க புதிய நீரேற்று நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் 65 சதவீதம் முடிந்து உள்ளது. 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த பணி முடிவடையும்.

    இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

    Next Story
    ×