என் மலர்
இந்தியா

அடல் சேது பாலம் பிக்னிக் ஸ்பாட் அல்ல: எச்சரிக்கை விடுத்த மும்பை போலீஸ்
- இந்தியாவின் மிக நீண்ட பாலம் மற்றும் மிக நீண்ட கடல் பாலம் என்ற பெருமையை அடல் சேது பெற்றது.
- இந்தப் பாலத்தில் செல்லும் மக்கள் வாகனங்களை நிறுத்தி புகைப்படம், வீடியோ எடுத்தவண்ணம் உள்ளனர்.
மும்பை:
மும்பை-நவி மும்பை இடையே அமைக்கப்பட்டுள்ள அடல் சேது பாலம் சமீபத்தில் திறக்கப்பட்டது. இந்தப் பாலத்தை பிரதமர் மோடி திறந்துவைத்த சில நாட்களில் அப்பகுதி மக்களுக்கு சுற்றுலா பகுதியாக மாறியுள்ளது.
இந்தப் பாலம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அந்தப் பாலத்தில் பொதுமக்கள் செல்பி மற்றும் புகைப்படங்களை எடுப்பதற்காக தங்கள் வாகனங்களை நிறுத்துவதை போலீசார் கவனித்தனர். இதுதொடர்பாக பல புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. பொதுமக்களின் பிக்னிக் ஸ்பாட் ஆக மாறத்தொடங்கியதால் பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலை உருவானது.
இந்நிலையில், பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மும்பை போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அடல் சேது பாலம் நிச்சயமாக பார்த்து ரசிக்கும் அளவிற்கு மதிப்புமிக்கது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் வாகனங்களை பாலத்தில் நிறுத்துவதும், புகைப்படங்கள் எடுப்பதும் சட்டவிரோதமானது. பாலத்தில் வாகனங்களை நிறுத்தும் பயணிகளுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்படும் என தனது எக்ஸ் தளத்தில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளது. மேலும், 21.8 கி.மீ. நீளமுள்ள அடல் சேது பாலம் பிக்னிக் ஸ்பாட் அல்ல என்றும் அந்த புகைப்படத்தில் குறிப்பிட்டுள்ளது.
இருசக்கர வாகனங்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள், டிராக்டர்கள், மெதுவாக நகரும் வாகனங்கள் ஆகியவை இந்தப் பாலத்தில் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






