என் மலர்
இந்தியா

பஹல்காம் தாக்குதலுக்கு பின் நாடெங்கும் முஸ்லிம் எதிர்ப்பு உணர்வு அதிகரிப்பு - எச்சரிக்கும் ஆய்வு
- கார் ஓட்டுநர் ஒரு காஷ்மீர் பெண்ணைத் தாக்கிய சம்பவமும் சண்டிகரில் நிகழ்ந்தது.
- இந்து மருத்துவர் தேசபக்தி என்ற பெயரில் ஒரு முஸ்லிம் கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு நாட்டில் முஸ்லிம் எதிர்ப்பு உணர்வு அதிகரித்துள்ளதை சிவில் உரிமைகள் பாதுகாப்பு சங்கம் (A.P.C.R.) நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஒரு கொலை உட்பட பல முஸ்லிம் விரோத சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அறிக்கையின்படி, முஸ்லிம் என்பதால் பலர் தாக்குதல்களையும் அவமானங்களையும் சந்தித்தனர். உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் க்ஷத்திரிய கோ ரக்ஷா தள உறுப்பினர் ஒருவர் ஒரு முஸ்லிமைக் கொன்றார்.
பெங்களூருவில் ஒரு முஸ்லிம் ஆர்வலர், பயங்கரவாதத் தாக்குதல் குறித்த விவாதத்தில் பங்கேற்காததற்காகவும், காயத்ரி மந்திரத்தை ஓதாததற்காகவும் அவரது சக ஊழியர்களால் அவமதிக்கப்பட்டார்.
சண்டிகரில் உள்ளூர்வாசிகளால் காஷ்மீர் மாணவர்கள் தாக்கப்பட்டனர். மேலும் பயங்கரவாதிகள் என்று கூறி அச்சுறுத்தப்பட்டனர். ஒரு கார் ஓட்டுநர் ஒரு காஷ்மீர் பெண்ணைத் தாக்கிய சம்பவமும் சண்டிகரில் நிகழ்ந்தது.
காஷ்மீர் மாணவர்கள் விடுதியில் தாக்கப்படுவதை பாதுகாப்பு அதிகாரிகள் பார்த்துக் கொண்டிருந்த சம்பவம், சண்டிகரில் உள்ள கல்வி நிறுவனத்தில் நிகழ்ந்துள்ளது. இதேபோன்ற ஒரு சம்பவம் இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ராவிலும் நடந்தது. காஷ்மீர் மாணவர்கள் தங்கியுள்ள விடுதி அறையை இடிக்க அங்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அரியானாவில் அம்பாலாவில், ஒரு முஸ்லிம் வர்த்தகரின் கடை மற்றும் ரிக்ஷாவை இந்து அமைப்புகள் தாக்கின. அரியானாவில் மேலும் இரண்டு முஸ்லிம் வியாபாரிகள் தாக்கப்பட்டனர்.
உத்தரபிரதேசத்தின் ஹாத்ராஸில் கோயில் கட்டுமானத்தில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் இளைஞர்கள் வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். கொல்கத்தாவில் ஒரு இந்து மருத்துவர் தேசபக்தி என்ற பெயரில் ஒரு முஸ்லிம் கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தார்.






