என் மலர்
இந்தியா

அல் பலாஹ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மற்றொரு பயங்கரவாதி.. 2008 தொடர் குண்டுவெடிப்புகளில் தொடர்பு
- இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாத அமைப்பில் இணைக்கும் பணியை செய்துவந்ததாக கூறப்படுகிறது.
- 2008ல் அகமதாபாத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 56 பேரும், டெல்லியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 20 பேரும் கொல்லப்பட்டனர்.
டெல்லி செங்கோட்டை அருகே உள்ள மெட்ரோ நிலையத்தின் அருகில் கடந்த 10 ஆம் தேதி நடந்த கார் குண்டு தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். இது தற்கொலை படை தாக்குதல் என என்ஐஏ உறுதி செய்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர் காஷ்மீரின் புல்வாமாவை சேர்ந்த மருத்துவர் உமர் என கண்டறியப்பட்டது.
அரியானாவின் பரிதாபாத்தில் உள்ள அல் பலாஹ் பல்கலைக்கழகத்தில் டாக்டராக பணியாற்றி அவர் பணியாற்றி வந்த நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த மற்ற மருத்துவர்கள், மற்றும் வியாபாரிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே அல் பலாஹ் பல்கலைக்கழக குழும தலைவர் ஜாவத் அகமது அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 13 நாள் நீதிமன்ற காவலில் உள்ளார்.
யுஜிசி அங்கீகாரத்தை பொய்யாக கோரியதாகவும், பல்கலைக்கழக அறக்கட்டளை மூலம் திரட்டப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிதி அவரது குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனங்களுக்குத் திருப்பி விடப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்தது.
இந்த சூழலில் அல் பலாஹ் பல்கலைக்கழகத்தில் மற்றொரு பயங்கரவாதி பட்டம் பெற்றதும் தெரியவந்துள்ளது.
2008ல் அகமதாபாத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 56 பேரும், டெல்லியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 20 பேரும் கொல்லப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி மிர்சா ஷதாப் பெய்க், அல் பலாஹ் பல்கலைக்கழகத்தில் 2007ஆம் ஆண்டு பொறியியல் பட்டம் பெற்றார்.
உத்தரபிரதேசத்தில் அசாம்ஹர் மாவட்டம் பரிடி கிராமத்தை சேர்ந்த இவர் முஜாஹிதீன் அமைப்பின் அசாம்ஹர் பகுதிக்கு தலைமை தாங்கியவர் என்பதும் 2008ஆம் ஆண்டு முதல் பல சதித் திட்டங்களைத் தீட்டி, இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாத அமைப்பில் இணைக்கும் பணியை செய்துவந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் அசாம்ஹர் பகுதிக்கு தலைமை தாங்கிய மிர்சா ஷதாப் பெய்க், தற்போது பாகிஸ்தானில் தங்கியிருப்பதாக நம்பப்படுகிறது.
மேலும் ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புக்கு தேவையான வெடிபொருட்களை உருவாக்க ஐஎம் பயங்கரவாதிகள் ரியாஸ் மற்றும் யாஸின் பட்கலுக்கு பெய்க் உதவியதும், புனே ஜெர்மன் பேக்கரியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு சதித்திட்டம் தீட்டியதும் தெரியவந்துள்ளது.
டெல்லியில் ஜாகிர் நகரில் பெய்க் வசித்து வந்த வீட்டில் போலீசார் நடத்திய சோதனையின் போது, அடையாள அட்டைகள் உள்பட பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
பட்லா ஹவுசில் நடத்தப்பட்ட என்கவுன்டரின் போது, 2008 தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஐஎம் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் மிர்சா ஷதாப் பெய்க் மற்றும் முகமது காலித் ஆகியோர் மட்டும் தலைமறைவாக உள்ளனர்.
இந்த சூழலில் பாகிஸ்தானில் தலைமறைவாக உள்ள பெய்க் பயின்ற பல்கலைக்கழகத்தை சேர்ந்த மற்றொரு மருத்துவர் உமர் தற்போது டெல்லி குண்டுவெடிப்பை நடத்தியுள்ளது சம்பவத்தின் பின்னால் இருக்கும் மிகப்பெரிய நெட்வொர்க்கை அம்பலப்படுத்தி உள்ளது.






