என் மலர்tooltip icon

    இந்தியா

    தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்... மத்திய அரசுக்கு அனைத்துக் கட்சி எம்.பி.க்கள்  கடிதம்
    X

    தலாய் லாமாவுக்கு 'பாரத ரத்னா' வழங்க வேண்டும்... மத்திய அரசுக்கு அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கடிதம்

    • அடுத்த தலாய் லாமாவை தேர்ந்தெடுப்பதில் சீனாவின் தலையீட்டை எம்.பி.க்கள் குழு கடுமையாக எதிர்த்தது.
    • தலாய் லாமாவின் வாரிசைத் தேர்ந்தெடுக்கும் உரிமை திபெத்திய மக்களுக்கு மட்டுமே உள்ளது

    நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதான 'பாரத ரத்னா' விருதை திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவுக்கு வழங்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.

    நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களை உள்ளடக்கிய 'திபெத்திற்கான அனைத்துக் கட்சி இந்திய நாடாளுமன்ற மன்றம்' சமீபத்தில் இது தொடர்பான முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியது.

    பிஜேடி மாநிலங்களவை எம்.பி. சுஜீத் குமார் தலைமையிலான இந்த மன்றத்தில் பாஜக மற்றும் ஜே.டி.யு உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

    தலாய் லாமாவுக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரித்து கையெழுத்து சேகரிப்பு பிரச்சாரமும் தொடங்கப்பட்டுள்ளதாக மன்ற ஒருங்கிணைப்பாளர் சுஜீத் குமார் தெரிவித்தார்.

    அடுத்த தலாய் லாமாவை தேர்ந்தெடுப்பதில் சீனாவின் தலையீட்டை எம்.பி.க்கள் குழு கடுமையாக எதிர்த்தது. 14வது தலாய் லாமாவின் வாரிசைத் தேர்ந்தெடுக்கும் உரிமை திபெத்திய மக்களுக்கு மட்டுமே உள்ளது என்பதை குழு தெரிவித்தது.

    திபெத்துக்கு ஆதரவாக அமெரிக்க காங்கிரஸ் சமீபத்தில் நிறைவேற்றிய மசோதாவை மன்றம் பாராட்டியது. நமது நாட்டின் நாடாளுமன்றத்திலும் இதேபோன்ற சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று எம்பிக்கள் குழு அழுத்தம் கொடுத்துள்ளது.

    1959 முதல் இந்தியாவில் தஞ்சம் அடைந்து வாழ்ந்து வரும் தலாய் லாமா கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது 90 வது பிறந்தநாளை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×