search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிபிஐ விசாரணைக்கு அகிலேஷ் யாதவ் ஆஜராக வாய்ப்பில்லை: கட்சி வட்டாரங்கள் தகவல்
    X

    சிபிஐ விசாரணைக்கு அகிலேஷ் யாதவ் ஆஜராக வாய்ப்பில்லை: கட்சி வட்டாரங்கள் தகவல்

    • 2012 முதல் 2017-ம் ஆண்டு வரை சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் முதல்-மந்திரியாக இருந்தார்.
    • இவருடைய பதவி காலத்தில் சுரங்கங்களை குத்தகைக்கு விடுவதில் பெரும் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு.

    உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவுக்கு சிபிஐ நேற்று சம்மன் அனுப்பியிருந்தது. அந்த சம்மனில் சட்ட விரோதமாக சுரங்கங்களை ஒதுக்கிய வழக்கு தொடர்பாக விசாரணைக்கு இன்று ஆஜராக வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் அகிலேஷ் யாதவ் டெல்லி சென்று சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வாய்ப்பு இல்லை என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    அகிலேஷ் யாதவ் இன்று லக்னோவில் பிற்படுத்தப்பட்டோர், தலித், சிறுபான்மையினர் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். அவர் கட்சி அலுவலகத்தில் இருந்து வேறு எங்கும் செல்லும் திட்டம் தற்போதை வரை இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

    சமாஜ்வாடி கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் மாநில தலைவர் ராஜ்பால் காஷியப் கூறுகையில் "அகிலேஷ் யாதவ் பிடிஏ (Picchda- பிற்படுத்தப்பட்டோர், தலித், சிறுபான்மையினர்) ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வார் என்றார்.

    சமாஜ்வாடி கட்சியின் செய்தி தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி "அகிலேஷ் யாதவ் இன்று எங்கேயும் செல்லமாட்டார். லக்னோவில் நடைபெறும் கட்சி அலுவலக ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வார்" என்றார்.

    சம்மன் தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறுகையில் "தேர்தல் வரும்போது நோட்டீஸ் வரும் என்பது எனக்குத் தெரியும். ஏன் இந்த பதட்டம்?. நீங்கள் (பா.ஜனதா) கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமான பணிகளை செய்திருந்தால் ஏன் பதட்டம் அடைகிறீர்கள்?" எனத் தெரிவித்திருந்தார்.

    முன்னதாக,

    உத்தர பிரதேசத்தில் கடந்த 2012 முதல் 2017-ம் ஆண்டு வரை சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் முதல்-மந்திரியாக இருந்தார். இவருடைய பதவி காலத்தில் சுரங்கங்களை குத்தகைக்கு விடுவதில் பெரும் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    பொதுப்பணித்துறையினர் சட்ட விரோதமாக சுரங்கத்தை அனுமதித்ததாகவும், சுரங்கம் தோண்டுவதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்திருந்த போதும் சட்ட விரோதமாக உரிமங்களை புதுப்பித்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கபட்டன.

    இதை தொடர்ந்து, சுரங்க முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன் பேரில் 2016-ம் ஆண்டு ஆரம்ப விசாரணை அறிக்கையை தாக்கல் செய்த சி.பி.ஐ., 2012-2013 வரையிலான காலக் கட்டத்தில் மாநில சுரங்கத்துறையை அகிலேஷ் யாதவ் கவனித்து வந்தபோது இந்த முறைகேடு நடந்ததாகவும், ஒரே நாளில் 13 சுரங்க குத்தகைகளுக்கு முதல்-மந்திரி அலுவலகம் அனுமதி அளித்ததாகவும் குற்றம் சாட்டியது.

    அதனை தொடர்ந்து சுரங்க முறைகேடு தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரகலா, சமாஜ்வாடி கட்சியின் எம்.எல்.சி. ரமேஷ் குமார் மிஸ்ரா உள்ளிட்ட 11 பேர் மீது சி.பி.ஐ. கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் வழக்கு பதிவு செய்தது.

    இந்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு, சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில் சமாஜ்வாடி கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது.

    Next Story
    ×