என் மலர்tooltip icon

    இந்தியா

    விவசாயப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்ட நடிகை கங்கனா ரனாவத்
    X

    விவசாயப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்ட நடிகை கங்கனா ரனாவத்

    • மகிந்தர் ஜியின் குடும்பத்தில் என்னை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.
    • இந்தச் சர்ச்சையை என் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

    வேளாண் திருத்த மசோதாவை எதிர்த்து 2021-ம் ஆண்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குறித்து எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்த நடிகை கங்கனா ரனாவத், ஒரு வயதான பெண்ணின் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். "டைம் பத்திரிகையால் மிகவும் சக்திவாய்ந்த இந்தியர் என்று குறிப்பிடப்பட்ட அதே பாட்டி இவர். பாகிஸ்தானியப் பத்திரிகையாளர்கள், இந்தியாவின் சர்வதேச மக்கள் தொடர்பு முயற்சிகளைக் கேவலமான முறையில் கைப்பற்றிவிட்டனர். சர்வதேச அளவில் நமக்காகப் பேச நமது ஆட்களே தேவை" என குறிப்பிட்டிருந்தார்.

    ஆனால், அவர் பகிர்ந்திருந்த படம் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 73 வயதான மஹிந்தர் கவுர். இவர் வேளாண் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டக்களத்தில் கலந்துகொண்டவர்.எங்கள் போராட்ட முறையை இழிவு படுத்தியிருக்கிறார் என பதிண்டா மாவட்ட நீதிமன்றத்தில் கங்கனா ரனாவத் மீது அவதூறு வழக்குப் பதிவு செய்திருந்தார்.

    பிப்ரவரி 2022-ல் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'கங்கனா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்' என்று சம்மன் அனுப்பியது. இந்த உத்தரவால் கோபமடைந்த கங்கனா ரனாவத், ஜூலை 2022-ல் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தை அணுகி, அவதூறு புகாரையும் கீழ் நீதிமன்றத்தின் சம்மன் உத்தரவையும் ரத்து செய்யக் கோரினார்.

    ஆனால், இந்த மனுவை ரத்து செய்வதற்கான எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறிய உயர் நீதிமன்றம் கங்கனா ரனாவத்தின் மனுவைத் தள்ளுபடி செய்தது. அதனைத் தொடர்ந்து கங்கனா ரனாவத் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். உச்ச நீதிமன்றமும் கங்கனா ரனாவத்தின் மனுவை ஏற்க முடியாது எனக் கடந்த செப்டம்பர் 12-ம் தேதி தெரிவித்தது. இந்த நிலையில், கங்கனாவின் வழக்கறிஞர் இந்த விவகாரத்தில் சிறப்பு விடுப்பு மனுவை வாபஸ் பெற விரும்புவதாகத் தெரிவித்தார். அதற்காக கங்கனா ரனாவத் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார்.

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா ரனாவத், "மகிந்தர் ஜியின் குடும்பத்தில் என்னை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. எப்படி அந்தப் பதிவு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது என்பது குறித்து மஹிந்தர் கவுரின் கணவருக்கு நான் ஒரு செய்தி அனுப்பியிருக்கிறேன்.இந்தச் சர்ச்சையை என் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. எந்த மாநிலத்தைச் சேர்ந்த தாதாவாக இருந்தாலும் எனக்கு மரியாதைக்குரியவர். மேலும் எந்த நபருக்கும் எதிராக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. நீதிமன்றத்தில் ஆஜரான உடனேயே, மஹிந்தர் கவுரின் கணவரிடம் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டிருக்கிறேன்" என்றார்.

    Next Story
    ×