என் மலர்
இந்தியா

காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற கர்நாடகாவை சேர்ந்த 170 பேரை மீட்க சிறப்பு குழு
- 2 சுற்றுலா பயணிகளின் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியை அறிவித்தார்.
- சிறப்பு விமானங்கள் மூலம் 40-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளனர்.
பெங்களூரு:
காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் கர்நாடகாவைச் சேர்ந்த 2 பேர் பலியானார்கள். இதையடுத்து அங்கு சுற்றுலா சென்றுள்ள கர்நாடக சுற்றுலா பயணிகள் சொந்த ஊருக்கு திரும்பியபடி உள்ளனர்.
இந்த தாக்குதலை கண்டித்த முதல்-மந்திரி சித்தராமையா பஹல்காமில் கொல்லப்பட்ட கர்நாடகாவை சேர்ந்த 2 சுற்றுலா பயணிகளின் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியை அறிவித்தார்.
மேலும் அங்கு சுற்றுலா சென்றுள்ள கர்நாடக மக்களை பத்திரமாக மீட்டு வர சிறப்பு குழு அமைத்துள்ளார். தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் லாட் தலைமையிலான கர்நாடகாவை சேர்ந்த அதிகாரிகள் குழு சிறப்பு விமானங்கள் மூலம் 40-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளனர். இன்னும் 170 பேர் ஜம்மு-காஷ்மீரில் உள்ளனர்.
இது குறித்து அமைச்சர் சந்தோஷ் லாட் கூறுகையில், கர்நாடகாவை சேர்ந்த 170 பேர் தற்போது காஷ்மீரில் இருப்பதாகவும், அவர்கள் விரைவாகவும் பாதுகாப்பாகவும் வீடு திரும்புவதற்கு அனைத்து உதவிகளையும் வழங்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் கூறினார்.
சிக்கமகளூரு நகரத்தின் ராமேஷ்வர் லேஅவுட்டைச் சேர்ந்த சந்திரசேகர், அவரது தாயார் இந்திரம்மா, மனைவி லீலா, குழந்தைகள் நக்சத் மற்றும் சினேகா ஆகிய 5 பேரும் தாக்குதல் நடந்தபோது பைசரன் பள்ளத்தாக்குக்கு சென்று கொண்டிருந்தனர். தாக்குதல் நடந்ததை அறிந்ததும் அவர்கள் உடனடியாக தங்கள் ஓட்டலுக்குத் திரும்பினர். தற்போது அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் வடக்கு கர்நாடகாவின் ஹரப்பனஹள்ளியை சேர்ந்த ஒரு குடும்பம், பஹல்காமில் உள்ள ஒரு கடையில் குங்குமப்பூவை வாங்கிக் கொண்டிருந்தபோது, செவ்வாய்க்கிழமை பிற்பகல் வணிக நிறுவனத்தை தாக்கிய பயங்கரவாதிகளின் துப்பாக்கி குண்டு மழை பொழிந்தனர். இது எங்களை குலை நடுக்க வைத்தது என்றனர்.






