search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிக்பள்ளாப்பூரில் தெருநாய் கடித்து சிகிச்சை பலனின்றி 5 வயது சிறுவன் பலி
    X

    சிறுவன் சமீர்

    சிக்பள்ளாப்பூரில் தெருநாய் கடித்து சிகிச்சை பலனின்றி 5 வயது சிறுவன் பலி

    • அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • சிறுவனுக்கு வெறிநாய் கடிக்கான ஊசி போடப்பட்டது.

    பெங்களூரு

    சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபிதனூர் தாலுகா கோடாலதின்னே கிராமத்தைச் சேர்ந்தவர் பைரோஜ். இவரது மனைவி பாமிதா. இவர்களது மகன் சமீர்(வயது 5). இந்த சிறுவன் கடந்த மாதம்(அக்டோபர்) 30-ந் தேதி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது சிறுவன் சமீரை ஒரு தெருநாய் கடித்தது. இதையடுத்து பைரோஜ் தனது மகனை ஹொசூரு கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு சிறுவனுக்கு வெறிநாய் கடிக்கான ஊசி போடப்பட்டது.

    ஆனால் நாய் கடித்து 5 நாட்கள் கழித்து சிறுவன் சமீர் தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்டான். இதனால் பதறிப்போன பைரோஜ், தனது மகன் சமீரை சிகிச்சைக்காக கவுரிபிதனூர் டவுனில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சிறுவன் சமீர் பெங்களூருவில் உள்ள இந்திரா காந்தி அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறுவன் சமீர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தான்.

    இதுபற்றி பைரோஜிடம் இந்திரா காந்தி ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறுகையில், 'வெறிநாய் கடிக்கு சரியான முறையில் சிறுவனுக்கு ஊசி போடப்படவில்லை. அதனால் சிறுவனின் உடலில் விஷம் அதிகரித்து ரத்தத்தில் கலந்துவிட்டது. அதனால்தான் சிறுவன் சமீர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துவிட்டான்' என்று தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த பைரோஜ்-பாமிதா தம்பதியும், அவர்களது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

    அதையடுத்து அவர்கள் ஹொசூரு கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று தங்களது மகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது குறித்தும், அவனுக்கு சிகிச்சை அளித்த விவரங்கள் அடங்கிய மருத்துவ ஆவணங்கள் குறித்தும் கேட்டனர். ஆனால் அவை யாவும் ஆஸ்பத்திரியில் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி அறிந்த மாவட்ட சுகாதார துறை அதிகாரி ரத்னம்மா, உயிரிழந்த சிறுவன் சமீரின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் தங்கள் மகனின் சாவுக்கு காரணமான மருத்துவ ஊழியர்கள் மற்றும் டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதுதொடர்பாக மனு ஒன்றையும் கொடுத்தனர்.

    அதை பெற்றுக்கொண்ட அதிகாரி ரத்னம்மா சம்பந்தப்பட்ட மருத்துவ ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×