என் மலர்
இந்தியா

ஹர்திக் பட்டேல் - அல்பேஸ் தாக்கோர்
பா.ஜனதாவில் போட்டியிட சீட் கேட்கும் முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள்
- கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு காங்கிரசில் இருந்து விலகிய முக்கிய தலைவர்கள் 35 பேர் தற்போது பாரதிய ஜனதாவில் உள்ளனர்.
- பிரிஜேஷ் மெர்ஜா சமீபத்தில் பாலம் இடிந்து விழுந்த மோர்பி தொகுதியில் வலுவான போட்டியாளராக உள்ளார்.
காந்தி நகர்:
குஜராத் மாநிலத்தில் வருகிற 1, 5 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
இதையொட்டி அம்மாநிலத்திற்கு தேர்தல் பணியில் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் ஆட்சியை தக்க வைக்க பாரதிய ஜனதா தீவிரம் காட்டி வருகிறது.
கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு 16 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் சேர்ந்தனர். அதன்பிறகு குஜராத்தில் பெரும்பான்மையாக உள்ள பட்டேல் இனத்தவருக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு வழங்கக்கோரி போராட்டம் நடத்திய
ஹர்திக் பட்டேல் - அல்பேஸ் தாக்கோர்
ஆகியோரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்திருந்தனர்.
அவர்கள் தற்போது பா.ஜ.க. சார்பில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்கள் உள்பட கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு காங்கிரசில் இருந்து விலகிய முக்கிய தலைவர்கள் 35 பேர் தற்போது பாரதிய ஜனதாவில் உள்ளனர்.
இவர்களில் சிலர் தற்போது பாரதிய ஜனதா சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக உள்ளனர்.
குறிப்பாக குன்வர்ஜி பவாலியா 5 முறை எம்.எல்.ஏ.வாகவும், மக்களைவை எம்.பி.யாகவும் இருந்துள்ளார். சோமாபாய் கோல்பட்டேல் சுரேந்திரன்நகரில் இருந்து மக்களவை உறுப்பினராகவும், லிம்பே சட்டமன்ற தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார்.
பிரிஜேஷ் மெர்ஜா சமீபத்தில் பாலம் இடிந்து விழுந்த மோர்பி தொகுதியில் வலுவான போட்டியாளராக உள்ளார்.
இந்த தலைவர்கள் அனைவருமே காங்கிரசில் இருந்து பா.ஜனதாவிற்கு வந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் தற்போது பா.ஜனதா சார்பில் போட்டியிடுவதற்காக முயற்சி செய்து வருவது பா.ஜனதாவுக்கு ஒரு வகையான இக்கட்டான சூழ்நிலையாக மாறி வருவதாக அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.
காங்கிரசில் இருந்து விலகி வந்த இந்த தலைவர்கள் அனைவருமே மக்கள் மத்தியிலும் பிரபலமாக உள்ளனர். எனவே அவர்களில் கணிசமானவர்களுக்கு சீட் வழங்க பா.ஜனதா பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே முன்னாள் முதல் மந்திரி விஜய் ரூபானி, துணைமுதல்வர் நிதின்பட்டேல் உள்ளிட்ட மூத்த பா.ஜனதா தலைவர்களும் தங்களது ஆதரவாளர்களுக்கு சீட் கேட்டு கட்சி தலைமைக்கு வலியுறுத்த உள்ளார்களாம்.
ஆனால் அவர்களுக்கு கட்சியில் வேறு பொறுப்புகள் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.






