என் மலர்
இந்தியா

பாலம் கட்டுமான பணியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 3 பேர் பலி: நவீன் பட்நாயக் இரங்கல்
- பிஜு ஜனதா தள தலைவரான நவீன் பட்நாயக் பலியானோருக்கு இரங்கல் தெரிவித்தார்.
- காயமடைந்த நபர்கள் விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும் என வேண்டிக்கொண்டனர்.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலத்தின் கட்டாக் நகரில் கதஜோடி ஆற்றின் மீது பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், பாலத்திற்கு தேவையான பெரிய கான்கீரீட்டால் ஆன ஸ்லாப் ஒன்றை கிரேன் உதவியுடன் தூக்கினர். அப்போது அது சரிந்து தொழிலாளர்கள் மற்றும் என்ஜினீயர் ஒருவர்மீது விழுந்தது.
இதில் 3 பேர் பரிதாபமாக பலியானார்கள். 2 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளும்படி முதல் மந்திரி மோகன் சரண் மஜ்ஜி உத்தரவிட்டார்.
இந்த விபத்து பற்றி தலைமை என்ஜினீயர் தலைமையிலான தொழில்நுட்ப குழுவினர் விசாரணை செய்து, 15 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்-மந்திரி அறிவித்து உள்ளார்.
எதிர்க்கட்சி தலைவரும், பிஜு ஜனதா தள தலைவருமான நவீன் பட்நாயக் பலியானோருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.






