search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்
    X
    மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்

    நாடு தழுவிய அளவில் சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார் அனுராக் தாக்கூர்

    மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று சைக்கிள் பேரணிகள் நடைபெறுகின்றன.

    புதுடெல்லி:

    உலக சைக்கிள் தினமான இன்று, நாடு முழுவதும்  சைக்கிள் பேரணிகளுக்கு மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    உடல் பருமன், சோம்பல், மன அழுத்தம், பதட்டம், நோய்கள் போன்றவற்றில் மக்கள் இருந்து விடுபடவும், சைக்கிள்  ஒட்டுவதை ஊக்குவிக்கும் வகையிலும் சைக்கிள் பேரணி நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தலைநகர் டெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் ஸ்டேடியத்தில் இருந்து இன்று காலை சைக்கிள் பேரணியை மத்திய விளையாட்டு மந்திரி  அனுராக் தாக்கூர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 750 சைக்கிள் வீரர்கள் கலந்து கொண்டனர். அவர்களுடன் மந்திரி அனுராக் தாக்கூர் சைக்கிள் ஓட்டிச்
    சென்றார்.
    முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

    உலக சைக்கிள் தினத்தையொட்டி பிரதமர் மோடியின் செய்தியை அனைவருக்கும் எடுத்துச் செல்ல விரும்புகிறோம். ஃபிட் இந்தியா இயக்கம், கேலோ இந்தியா இயக்கம், தூய்மை இந்தியா இயக்கம் மற்றும் ஆரோக்கியமான இந்தியா இயக்கம் அனைத்தையும் சைக்கிள் ஓட்டுவதன் மூலம் நிறைவேற்ற முடியும். இது காற்று மாசு அளவையும் குறைக்கும்

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 75 இடங்களில் இன்று சைக்கிள் பேரணிகள் நடைபெறுகின்றன.

    இதில் 1,29,000 இளைஞர்கள் பங்கேற்பார்கள் என்றும், இன்று ஒரே நாளில் 9,68,000 கிலோ மீட்டர் தூரத்திற்கும் அதிகமாக அவர்கள் சைக்கிள் மூலம் கடக்க உள்ளதாகவும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×