search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தினகரன்
    X
    தினகரன்

    நான் நிரபராதி, எந்த தவறும் செய்யவில்லை- தினகரன் பேட்டி

    சுகேஷ் சந்திரசேகரும் ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணையில் இருப்பதால் இருவரிடமும் தனித்தனி அறைகளில் மாறி மாறி விசாரணை நடத்தப்பட்டது. தினகரனிடம் சுமார் 11 மணிநேரம் விசாரணை நடந்தது.

    புதுடெல்லி:

    ஜெயலலிதா மறைந்த பிறகு அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டது. இதையடுத்து அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் முடக்கியது.

    அப்போது சசிகலா தலைமையிலான அணிக்கு இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. லஞ்ச பணமாக ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், இடைத்தரகர் சுகேஷ் சந்திர சேகர் உள்ளிட்டோர் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுதொடர்பாக டி.டி.வி. தினகரன், சுகேஷ் சந்திர சேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு டி.டி.வி. தினகரன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    இந்த வழக்கில் 5 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். கடந்த 4-ந்தேதி இந்த வழக்கை பதிவு செய்த அமலாக்கத் துறையினர் முதலில் சுகேஷ் சந்திரசேகரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    சுகேஷ் சந்திரசேகர் விசாரணையின் போது, ‘டி.டி.வி.தினகரன், தன்னிடமும், தனது மனைவியிடமும் ரூ.25 கோடி கொடுத்தார்’ என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    அதன் அடிப்படையில் டி.டி.வி. தினகரனிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த வாரம் சம்மன் அனுப்பினார்கள் இதையடுத்து டி.டி.வி. தினகரன் நேற்று காலை 11 மணிக்கு டெல்லி ஜன்பத் சாலையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணையை தொடங்கினார்கள்.

    சுகேஷ் சந்திரசேகரும் ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணையில் இருப்பதால் இருவரிடமும் தனித்தனி அறைகளில் மாறி மாறி விசாரணை நடத்தப்பட்டது. தினகரனிடம் சுமார் 11 மணிநேரம் விசாரணை நடந்தது.

    விசாரணை முடிந்து வெளியே வந்த டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சுகேஷ் சந்திரசேகர் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி மாற்றி வாக்குமூலம் அளித்து வருகிறார். என்னை சிக்க வைப்பதற்காக அவர் மாற்றி மாற்றி சொல்கிறார் என்று நினைக்கிறேன். நான் நிரபராதி, எந்த தவறும் செய்யவில்லை.

    சுகேஷ் சந்திரசேகர் சொன்ன வாக்குமூலத்தின் அடிப்படையில் என்னிடம் விசாரிக்க வேண்டிய கட்டாயம் அதிகாரிகளுக்கு ஏற்பட்டது. அதனால் என்னை அழைத்து விசாரணை நடத்தினார்கள். நான் எந்த தவறும் செய்யவில்லை என்று அதிகாரிகளிடம் சொல்லி இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்... லட்சுமி நரசிம்மர் கோவிலிலுக்கு செல்ல வசதியாக சோளிங்கரில் நாளை ரோப் கார் சோதனை ஓட்டம்

    Next Story
    ×