search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சி.பி.ஐ. விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவு
    X
    சி.பி.ஐ. விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவு

    மேற்கு வங்காளத்தில் 8 பேர் எரித்துக்கொலை- சி.பி.ஐ. விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவு

    8 பேர் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஏப்ரல் 7-ந்தேதிக்குள் சி.பி.ஐ. விசாரணை நடத்தி முதல் கட்ட அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலம் பீர்பூம் மாவட்டத்தில் உள்ள ராம்புராட் என்ற இடத்தில் சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்து துணைத் தலைவர் படுகொலை செய்யப்பட்டார்.

    இதனால் அந்த கிராமத்தில் பயங்கர வன்முறை ஏற்பட்டது. வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

    இந்த வன்முறையில் 3 பெண்கள், 2 சிறுவர்கள் உள்பட 8 பேர் வீடுகளுக்குள் பூட்டப்பட்டு கொடூரமாக எரித்து கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வு அலைகளை ஏற்படுத்தியது.

    திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்தவர்கள் இந்த வெறியாட்டத்தில் ஈடுபட்டதாக பா.ஜனதா குற்றம் சாட்டியது. இதையடுத்து சம்பவம் நடந்த பகுதிக்கு அனைத்துக் கட்சிகளும் குழுக்களை அனுப்பி ஆய்வு செய்து வருகின்றன.

    இந்த நிலையில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வன்முறை நடந்த கிராமத்துக்கு நேற்று நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “குற்றவாளிகள் மீது கடும் நடவக்கை எடுக்கப்படும்“ என்றார்.

    அவர் பேட்டியளித்த அடுத்த சில மணிநேரத்துக்குள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த அனாரூல் ஹுசைன் என்பவரை போலீசார் கைது செய்தனர். 8 பேர் கொலையில் இவர்தான் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார்.

    பீர்பூம் விவகாரம்

    ஏற்கனவே 8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவர் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

    இதற்கிடையே 8 பேர் கொலை தொடர்பாக மேற்கு வங்காள ஐகோர்ட்டு தானாக முன்வந்து விசாரணையை தொடங்கி உள்ளது. நேற்று மேற்கு வங்காள அரசு சார்பில் இடைக்கால விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    இன்று இந்த வழக்கு விசாரணை மீண்டும் ஐகோர்ட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது 8 பேர் எரித்து கொல்லப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    8 பேர் கொலை விவகாரத்தை விசாரிக்க மேற்கு வங்காள மாநில அரசு சிறப்பு குழு ஒன்றை ஏற்கனவே அமைத்துள்ளது. இந்தக்குழு தங்கள் வசம் உள்ள அனைத்து தகவல்களையும், ஆவணங்களையும் சி.பி.ஐ.யிடம் உடனே ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    இந்த வழக்கில் அடுத்த விசாரணை ஏப்ரல் 7-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஏப்ரல் 7-ந்தேதிக்குள் சி.பி.ஐ. விசாரணை நடத்தி முதல் கட்ட அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×