search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை
    X
    கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை

    உக்ரைன்- ரஷியா சண்டை முடிந்தபின் மாணவர் உடல் இந்தியா கொண்டு வரப்படும்: கர்நாடக மாநில முதல்வர்

    உக்ரைன்- ரஷியா இடையிலான சண்டையின்போது இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அவரது உடல் இன்னும் இந்தியா கொண்டு வரப்படாமல் உள்ளது.
    உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த வாரம் கார்கிவ் நகரில் நடைபெற்ற சண்டையின்போது இந்திய மாணவர் நவீன் சேகரப்பா கொல்லப்பட்டார். அவரது உடல் உக்ரைனில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் இந்தியா கொண்டு வரப்படாமல் உள்ளது.

    இந்த நிலையில், உக்ரைன்- ரஷியா இடையிலான சண்டை முடிவுக்கு வந்தபின், நவீன் உடல் இந்தியா கொண்டு வரப்படும் என கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பசவராஜ் பொம்மை கூறுகையில் ‘‘வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எங்களிடம், நவீன் உடல் எம்பாமிங் செய்யப்பட்டு உக்ரைனில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு சண்டை முடிவுக்கு வந்தபின் உடல் இந்தியா கொண்டு வரப்படும்’’ என்றார்.

    கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை கார்கிவில் நடைபெற்ற சண்டையின்போது ரஷிய படைகள் கவர்னர் மாளிகையை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலின்போது கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என்ற 21 வயது மாணவன் கொல்லப்பட்டார். அவர் கார்கிவ் தேசிய மருத்துவமனை பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். பதுங்கு குழியில் இருந்து வெளியே வந்து, தேவையான பொருட்கள் வாங்குவதற்காக ஒரு கடையில் வரிசையாக நின்றிருந்த போது கொல்லப்பட்டார்.

    கடந்த புதன்கிழமை, இரண்டு நாட்களுக்குள் நவீன் உடல் இந்தியா கொண்டு வரப்படும் என அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. தனது மகனின் உடலை இந்தியா கொண்டுவர பிரதமர் மோடி, முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஆகியோர் உதவி செய்ய வேண்டும் என கொல்லப்பட்ட நவீனின் தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

    பா.ஜனதா எம்.எல்.ஏ. ஒருவர் மீட்பு விமானத்தில் கொல்லப்பட்ட மாணவின் உடல் அதிகமான இடங்களை பிடிக்கும் எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×