search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கே.ஆர். ரமேஷ்
    X
    கே.ஆர். ரமேஷ்

    பாலியல் பலாத்காரத்தை அனுபவிக்க வேண்டும்: எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு

    சட்டசபையைில் சபாநாயகருடன் காரசாரமான விவாதத்தின்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் பேசியது சர்ச்சையாக வெடித்துள்ளது.
    பாலியல் பலாத்காரத்தை தவிர்க்க முடியவில்லை என்றால் அதை அனுபவிக்க வேண்டும் என கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ கே.ஆர். ரமேஷ் குமார் சட்டப்பேரவையில் பேசிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது, சமீபத்தில் பெய்த மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டதை குறித்து விவாதிக்க கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும்  என எம்.எல்.ஏ.க்கள் கோஷமிட்டனர். 

    அவர்களை இருக்கையில் அமரும்படி கூறிய சபாநாயகர் விஷ்வாஷ்வார் ஹெக்டே கார்கி, ‘உங்களை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த சூழ்நிலையை  அனுபவிப்போம் என்பதுபோல்  உணர்கிறேன். இதற்கு மேல் என்னால் இந்த சபையை முன்னோக்கி நடத்திச் செல்ல முடியவில்லை.’ எனக் கூறினார்.

    அப்போது குறுக்கிட்ட முன்னாள் சபாநாயகரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ரமேஷ் குமார், ‘பாலியல் பலாத்காரத்தை தவிர்க்க முடியவில்லை என்றால் படுத்துக்கொண்டு அதை அனுபவிக்க வேண்டும் என்று பழமொழி உள்ளது. அதுபோல இருக்கிறது உங்கள் நிலைமை’ என்று கூறினார். இந்த சம்பவம் சர்ச்சையானது. அவர் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என அவரது கட்சி உறுப்பினர்கள் உட்பட அனைத்து கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர். அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களிலும் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து எம்.எல்.ஏ. ரமேஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ பாலியல் பலாத்காரம் குறித்த எனது வார்த்தைகளுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனி கவனமாக பேசுவேன்’ என கூறி வருத்தம் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×