search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றம்
    X
    பாராளுமன்றம்

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றம் நாளை கூடுகிறது- வேளாண் சட்டங்கள் ரத்தாகிறது

    குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவை வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்ய உள்ளார்.
    புதுடெல்லி:

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. சுமார் 3 வாரங்கள் இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

    இதையொட்டி இன்று சபாநாயகர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

    புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நாளை தாக்கல் செய்யப்படுகிறது. விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக புதிய வேளாண் சட்டத்தை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

    இதற்கு கடந்த 24-ந்தேதி மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவை வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்ய உள்ளார்.

    வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவில், ‘சிறு குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை புதிய வேளாண் சட்டங்கள் வழங்கின. ஆனால் சில விவசாய குழுக்கள் இதனை எதிர்த்து போராட்டம் நடத்தியதால் மத்திய அரசு முயற்சி தோல்வி அடைந்துள்ளது.

    விவசாயிகள் அனைவரையும் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக ஒன்றிணைத்து செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருப்பதால் வேளாண் சட்டங்களை திரும்ப பெறுகிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது. 

    நாளை பாராளுமன்றம்  கூடியதும், மக்களவையில் முதலில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும். அதன் மீது எம்.பி.க்கள் விவாதம் நடத்துவார்கள். அதன் பிறகு மக்களவையில் வேளாண் சட்ட ரத்து மசோதா நிறைவேற்றப்படும். அதன்பிறகு மாநிலங்களவையில் வேளாண் சட்ட ரத்து மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்படும். அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்குவார். அதன்பிறகு புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
    Next Story
    ×