search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சயானி கோஷ்
    X
    சயானி கோஷ்

    திரிபுரா முதல்வருக்கு மிரட்டல்- திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சயானி கோஷ் கைது

    கொலை முயற்சி, இரு குழுக்களிடையே விரோதத்தை தூண்டுதல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் சயானி கோஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    அகர்தலா:

    மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ், அடுத்து திரிபுரா மற்றும் கோவா மாநில சட்டமன்றத் தேர்தல்களை குறிவைத்துள்ளது. பாஜக ஆட்சி நடைபெற்று வரும் திரிபுராவில், 2023 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் தனது பணிகளை மேற்கொண்டுள்ளது. வரும் 25ம் தேதி நடைபெறும் உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிடுகிறது. இதற்காக கட்சியின் முக்கிய தலைவர்கள் திரிபுராவில் முகாமிட்டு பொதுக்கூட்டங்களை நடத்திவருகின்றனர்.

    இந்நிலையில், திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த மேற்கு வங்காள தலைவர் சயானி கோஷ், நேற்று இரவு அகர்தலாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது முதல்வர் பிப்லப் தேவை கடுமையாக சாடினார். அவரை மிரட்டும் தொனியில் பேசியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. 

    இதனையடுத்து சயானி கோஷை இன்று காவல் நிலையத்திற்கு வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் சயானி கோஷ் கைது செய்யப்பட்டார். கொலை முயற்சி, இரு குழுக்களிடையே விரோதத்தை தூண்டுதல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சதார் துணைக்கோட்ட காவல் அதிகாரி ரமேஷ் யாதவ் தெரிவித்தார். மேலும், சயானி கோஷூடன் வந்திருந்த சிலர், முதல்வர் பங்கேற்ற தெருமுனை பிரச்சாரம் நடைபெற்ற பகுதியில் கற்களை வீசி தாக்கியதாகவும் அதிகாரி ரமேஷ் யாதவ் கூறினார்.

    சயானி கோஷ் கைது செய்யப்பட்டதையடுத்து இரு கட்சிகளின் தலைவர்களும் கருத்து மோதல்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×