search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவசேனா
    X
    சிவசேனா

    மத்திய அரசின் அதிகார அகந்தை வீழ்ச்சி அடைந்துள்ளது- சிவசேனா

    வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் அறிவிப்பு அதிகார அகந்தையின் வீழ்ச்சி என்று சிவசேனா தெரிவித்துள்ளது.
    மும்பை:

    மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் அறிவித்தார்.

    இது தொடர்பாக சிவசேனா கட்சியின் நாளிதழான சாம்நாத் தனது தலையங்கத்தில் கருத்து தெரிவித்துள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

    13 மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களில் பா. ஜனதாவுக்கு ஏற்பட்ட தோல்வியின் காரணமாக 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் ஞானம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

    எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கி வேளாண் சட்டங்கள் தொடர்பான மசோதாக்களை மத்திய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது.

    விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு முழுமையாக புறக்கணித்தது. போராட்ட களத்தில் குடிநீர், மின்சார இணைப்புகளை துண்டித்தது. போராட்டம் நடத்திய விவசாயிகளை காலிஸ்தான்கள், பாகிஸ்தானியர்கள், பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தியது.

    ஆனாலும் தங்கள் கோரிக்கைகளில் இருந்து விவசாயிகள் பின்வாங்கவில்லை. உத்தரபிரதேசத்தில் லக்பூரில் மத்திய மந்திரி மகன் சென்ற கார் மோதி விவசாயிகள் உயிரிழந்த சம்பவத்துக்கு பிரதமர் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை.

    விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட மாட்டார்கள் என்பதை அறிந்தும் விரைவில் உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாபில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு தோல்வி ஏற்பட உள்ளதை உணர்ந்தும் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடிவு செய்துள்ளது.

    மகாபாரதமும், ராமாயணமும் அகந்தை முழுமையாக நசுக்கப்படும் என்று போதிக்கின்றன. ஆனால் அதனை போலி இந்துத்துவா வாதிகள் மறந்து விட்டு ராவணனைப்போல் உண்மை மற்றும் நீதி மீது தாக்குதல் தொடுத்தனர்.

    வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் அறிவிப்பு அதிகார அகந்தையின் வீழ்ச்சி ஆகும். இனிமேலாவது இதுபோன்ற சட்டங்களை கொண்டு வரும் முன்பு மத்திய அரசு தனது அகந்தையை கைவிட்டு நாட்டு நலன் கருதி எதிர்க்கட்சிகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

    இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×