என் மலர்
செய்திகள்

உச்ச நீதிமன்றம்
லக்கிம்பூர் வழக்கு: எதிர்பார்த்தபடி விசாரணை நடக்கவில்லை- உச்சநீதிமன்றம் அதிருப்தி
லக்கிம்பூர் வன்முறை தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் நடைபெற்றது.
புதுடெல்லி:
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த அக்டோபர் மாதம் 3ம் தேதி வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது, விவசாயிகள் மீது பாஜகவினர் சென்ற கார் மோதியதாலும், அதன்பின்னர் நடந்த வன்முறையாலும் மொத்தம் 8 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விவசாயிகள் கொல்லப்பட்டது தொடர்பாக மத்திய மந்திரி அஜய் மிஷ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, ஆஷிஷ் பாண்டே லவகுஷா ராணா உள்ளிட்ட 13 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, ஆஷிஷ் மிஸ்ரா உள்பட மூன்று பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு ஏற்றது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் நடைபெற்றது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக, உத்தரப் பிரதேச காவல்துறையின் விசாரணை எதிர்பார்த்தபடி நடக்கவில்லை என்று நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
மேலும், உத்தரப் பிரதேச காவல் துறையின் தற்போதைய விசாரணையை முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி கண்காணிப்பில் நடத்த பரிந்துரைத்தார். இதற்கான பதிலை உத்தரப் பிரதேச அரசு வரும் வெள்ளிக்கிழமைக்குள் தெரிவிக்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும்வரை, விசாரணையை மேற்பார்வையிட பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகளான ராகேஷ் குமார் ஜெயின் அல்லது ரஞ்சித் சிங் ஆகியோரின் பெயர்களை பரிந்துரைத்தது உச்ச நீதிமன்றம்.
இதற்கிடையே, வீடியோ ஆதாரம் தொடர்பான தடயவியல் அறிக்கைகளை பெறுவதில் தாமதம் ஏற்பட்டதையும் அது கவனத்தில் கொண்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இதையும் படியுங்கள்... பத்ம பூஷன் விருது பெற்றார் பி.வி.சிந்து
Next Story