search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து
    X
    கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து

    கோவிஷீல்டு இரண்டு டோஸ்களுக்கான இடைவெளி மேலும் அதிகரிப்பு -நிபுணர் குழு பரிந்துரை

    கோவிஷீல்டு இரண்டு டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரிக்கும் பரிந்துரையானது, தடுப்பூசி நிர்வாகம் குறித்த தேசிய நிபுணர் குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த இரண்டு மருந்துகளும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இரண்டு மருந்துகளும் குறிப்பிட்ட இடைவெளிக்குள் இரண்டு டோஸ்கள் செலுத்தப்படவேண்டும். 

    கோவாக்சின் தடுப்பூசி மருந்தின் முதல் டோஸ் போட்டபிறகு, இரண்டாவது டோஸ் 4 வாரம் முதல் 6 வார இடைவெளிக்குள் செலுத்தப்படுகிறது. கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோசுக்கும் இரண்டாம் டோசுக்கும் உள்ள இடைவெளி 4-6 வாரமாக முதலில் பின்பற்றப்பட்டது. பிறகு இந்த இடைவெளியை 6-8 வாரமாக மாற்றி மத்திய சுகாதாரத்துறை பரிந்துரைத்தது. 

    தடுப்பூசி போடும் பணி

    இந்த நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோசுக்கும் இரண்டாம் டோசுக்கும் உள்ள இடைவெளி மீண்டும் அதிகரிக்கப்பட உள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோசை 12 முதல் 16 வாரங்களுக்குள் செலுத்துமாறு நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. இரண்டாவது டோஸ் 12-16 வாரங்களுக்குள் வழங்கப்பட்டால் கூடுதல் பலன் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் தடுப்பூசியைத் தேர்வு செய்யலாம் என்றும், பிரசவத்திற்குப் பிறகு பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதி பெறுவார்கள் என்றும் தேசிய நோய்த்தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு கூறி உள்ளது. தற்போதைய நெறிமுறைகளின் கீழ், இவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதி இல்லை.

    இந்த பரிந்துரைகளானது, தடுப்பூசி நிர்வாகம் குறித்த தேசிய நிபுணர் குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். தேசிய நிபுணர் குழு ஒப்புதல் வழங்கியதும், இந்த பரிந்துரையை மத்திய சுகாதார அமைச்சகம் பரிசீலித்து அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களுக்கான இடைவெளியை இவ்வாறு நீட்டிக்கும் பரிந்துரையை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம் செய்துள்ளார். 

    இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடுவதற்கு, முதலில் நான்கு வாரம் இடைவெளி என்றார்கள். பின்னர் 6-8 வாரம், இப்போது 12-16 வாரம். போதிய தடுப்பூசிகள் இல்லாததால் இப்படி செய்கிறார்களா? அல்லது தொழில்முறை அறிவியல் ஆலோசனை அவ்வாறு உள்ளதா? என்று ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.
    Next Story
    ×