search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுஷாந்த் சிங்
    X
    சுஷாந்த் சிங்

    சுஷாந்த் சிங் மரண வழக்கில் சிக்கிய டெல்லி வழக்கறிஞர்... காரணம் இதுதான்

    நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞரை போலீசார் கைது செய்து, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    மும்பை:

    இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14ந்தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நடிகரின் மரணம் குறித்து சி.பி.ஐ., அமலாக்கத்துறை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) ஆகிய 3 முகமைகள் விசாரணை நடத்தி வருகின்றன. 

    போதைப்பொருள் கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டதில், பல்வேறு பாலிவுட் நட்சத்திரங்கள் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. வழக்கு தொடர்பாக புதுப்புது தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

    இந்நிலையில், சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக போலியான செய்திகளை பரப்பியதாக டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் விபோர் ஆனந்த் என்பவரை மும்பை போலீசார் கைது செய்தனர். பின்னர் டெல்லியில் இருந்து அவரை மும்பைக்கு கொண்டு வந்தனர். சமூக வலைத்தளங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதால், அவரது டுவிட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

    கைது செய்யப்பட்ட நபர் சமூக ஊடகங்களில் பல பரபரப்பான மற்றும் அவதூறான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சுஷாந்த் சிங் மற்றும் அவரது முன்னாள் மேலாளர் திஷா சாலியன் ஆகியோரின் மரண வழக்குகள் தொடர்பாக பல போலியான தகவலை வெளியிட்டு, அதன் மூலம் பலரை குறிவைத்திருக்கிறார் என போலீசார் கூறுகின்றனர்.

    மேலும், அவர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். 

    சுஷாந்த் சிங் இறப்பதற்கு முன்னர் விபோர் ஆனந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், சுஷாந்தின் முன்னாள் மேலாளர் திஷா சாலியன் மரணம் தொடர்பாக சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதில், திஷா சாலியன் இறப்பதற்கு முன்னர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், பல முக்கிய நபர்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தார். 

    திஷா சாலியன், கடந்த ஜூன் 8ம் தேதி மும்பையில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் 14வது மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×