search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபாநாயகர் ஓம்பிர்லா
    X
    சபாநாயகர் ஓம்பிர்லா

    மக்களவை துணை சபாநாயகர் தேர்தல் எப்போது நடக்கும்? சபாநாயகர் ஓம்பிர்லா பதில்

    மக்களவை துணை சபாநாயகர் தேர்தல் எப்போது நடக்கும் என்பது பற்றி சபாநாயகர் ஓம்பிர்லா பதில் அளித்தார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், இம்மாதம் 14-ந் தேதி தொடங்குகிறது. அக்டோபர் 1-ந் தேதி முடிவடைகிறது. கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    கொரோனா காலம் என்பதால், சமூக இடைவெளியுடன் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், கூட்டத்தொடர் குறித்து மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    இருக்கைகள் இடைவெளி விட்டு அமைக்கப்பட்டுள்ளதால், மக்களவையில் எல்லா உறுப்பினர்களுக்கும் இடம் இல்லை.

    எனவே, மக்களவை அரங்கில் 257 உறுப்பினர்களும், மக்களவை பார்வையாளர் மாடத்தில் 172 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 60 உறுப்பினர்களும், மாநிலங்களவை பார்வையாளர் மாடத்தில் 51 உறுப்பினர்களும் அமர்வார்கள்.

    காகித பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எம்.பி.க்கள் தங்கள் வருகையை மின்னணு முறையில் பதிவு செய்வார்கள். ஆங்காங்கே எல்.இ.டி. திரைகள் நிறுவப்படும்.

    பாராளுமன்றம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்படும். கூட்டத்தொடருக்கு முன்பாக, எம்.பி.க்கள் பி.சி.ஆர். கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

    கொரோனா காலத்தில் இந்த தொடர் நடத்துவது சவாலானதாக இருக்கும். ஆனால், நாம் நமது அரசியல் சட்ட கடமைகளை நிறைவேற்ற வேண்டும். பாராளுமன்றத்தை மிகுந்த பொறுப்புடையதாகவும், மக்களுக்கு பதில் சொல்லக்கூடியதாகவும் மாற்ற வேண்டும்.

    இந்த கூட்டத்தொடர் வரலாற்று சிறப்புமிக்கது. வழிகாட்டு நெறிமுறைகளுடன் இதை நடத்த வேண்டும். பூஜ்ய நேரம் அரை மணி நேரம் மட்டும் நடைபெறும். கேள்வி நேரம் கிடையாது. இருப்பினும், எழுத்துப்பூர்வமாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மக்களவை துணை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருப்பது பற்றி நிருபர்கள் கேட்டனர்.

    அதற்கு ஓம்பிர்லா, ‘‘துணை சபாநாயகரை நான் தேர்வு செய்ய முடியாது. அதுபற்றி மக்களவையும், மத்திய அரசும்தான் முடிவு செய்ய வேண்டும்’’ என்று பதில் அளித்தார்.
    Next Story
    ×