search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    அயோத்தி ராமர் கோவில் வங்கிக்கணக்கில் ரூ.6 லட்சம் ‘அபேஸ்’

    போலி காசோலைகளை பயன்படுத்தி, ராமர் கோவில் அறக்கட்டளை வங்கிக்கணக்கில் இருந்து ரூ.6 லட்சம் பெற்ற ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    அயோத்தி:

    அயோத்தியில் ராமர் கோவில் கட்ட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. ராமர் கோவில் கட்டுமான பணிகளை கவனிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது.

    ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு பிரதமர் மோடி முன்னிலையில் சில வாரங்களுக்கு முன்பு பூமி பூஜை நடைபெற்றது. ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை பெயரில் உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

    அந்த வங்கிக்கணக்கில் இருந்து போலி காசோலைகள் மூலம் ரூ.6 லட்சம் பெறப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.

    கடந்த 2-ந்தேதி, ஒரு போலி காசோலை மூலம் ரூ.2½ லட்சமும், 3-ந்தேதி மற்றொரு போலி காசோலை மூலம் ரூ.3½ லட்சமும் பெறப்பட்டுள்ளது. இதுகுறித்து அயோத்தியில் உள்ள கோட்வாலி போலீஸ் நிலையத்தில் அறக்கட்டளை நிர்வாகிகள் புகார் செய்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சைபர் கிரைம் போலீசாரிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இந்த மோசடியை அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் உறுதி செய்தார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:-

    மோசடி ஆசாமிகள், 3-வது தடவையாக போலி காசோலையை பயன்படுத்தியபோதுதான் இந்த மோசடி தெரியவந்தது. அவர்கள் ரூ.9 லட்சத்து 86 ஆயிரத்துக்கான போலி காசோலையை அதே வங்கிக்கிளையில் சமர்ப்பித்து இருந்தனர்.

    பெரிய தொகை என்பதால், அதை உறுதி செய்வதற்காக, வங்கியில் இருந்து எங்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதன்பிறகுதான் மோசடியை உணர்ந்தோம். போலீசுக்கு தகவல் கொடுத்தோம். வங்கிக்கணக்கை ஆய்வு செய்தபோது, ஏற்கனவே 2 போலி காசோலைகள் மூலம் ரூ.6 லட்சம் பெறப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குற்றவாளிகளை விரைவில் பிடித்து விடுவோம் என்று அயோத்தி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்குமார் ராய் தெரிவித்தார். ஏற்கனவே, ராமர் கோவில் பெயரைச்சொல்லி மீரட் உள்ளிட்ட இடங்களில் நன்கொடை வசூலித்து வந்த மோசடி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×