search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அமைச்சர் கிரண்  ரிஜிஜு
    X
    மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

    அருணாசல பிரதேச எல்லையில் காணாமல் போன 5 இந்தியர்கள் இருக்கும் இடம் கண்டுபிடிப்பு

    அருணாச பிரதேச எல்லையில் காணாமல் போன ஐந்து இந்தியர்கள் எங்கள் எல்லைக்குள் இருக்கின்றனர் என்று சீனா தற்போது ஒப்புக்கொண்டுள்ளது.
    அருணாசல பிரதேச எல்லை காடுகளில் இரு தினங்களுக்கு முன்பு காணாமல் போன 5 இந்திய இளைஞர்கள் சீன பகுதியில் இருப்பதாக இந்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் கிரண் ரிஜிஜு, ‘‘இந்திய ராணுவம் அனுப்பியிருந்த ஹாட்லைன் தகவலுக்கு சீன ராணுவம் பதில் அளித்துள்ளது. அருணாசல பிரதேசத்தில் காணாமல் போன 5 இளைஞர்களும் தங்களின் பகுதியில் இருப்பதை சீன ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. அவர்களை ஒப்படைக்கும் நடைமுறைகளில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது’’ என்று கூறியுள்ளார்.

    முன்னதாக, இந்திய ராணுவத்துக்காக சுமை தூக்கும் பணியில் ஈடுபட்டு வந்த 5 பேர் அருணாசல பிரதேசத்தில் காணாமல் போன விவகாரத்தில் சீனா முரண்பட்ட தகவ வெளியிட்டு வந்தது. வாரஇறுதியில் காணாமல் போன அந்த ஐந்து பேரும் சீன ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கிறார்களா என்று இந்திய ராணுவமும் கேட்டிருந்தது.

    இந்த நிலையில், பெய்ஜிங்கில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவு செய்தித்தொடர்பாளர் லிஜியான், ‘‘சீனாவின் கிழக்குப்பகுதி, இந்திய எல்லை, சீனாவின் தென்பகுதி திபெத் எவை என்பதில் தொடர்ச்சியாக சீனா தெளிவாகவே உள்ளது’’ என்றார்.

    ‘‘தெற்கு திபெத்தின் அங்கமாக அருணாசல பிரதேசத்தை கருதும் சீனா, அது இந்தியாவின் பகுதி என்பதை ஒருபோதும் அங்கீகரித்ததில்லை’’ என்று ட்செள லிஜியான் தெரிவித்ததாக அந்நாட்டு அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் கூறியுள்ளது.

    இந்தியா, சீனா எல்லையில் உள்ள சுபான்சிரி மாவட்டத்தில் இந்திய ராணுவத்துக்காக சுமை தூக்கும் பணியில் ஈடுபட்ட ஐந்து இந்திய இளைஞர்கள் காணாமல் போனது தொடர்பான தகவலை சீன ராணுவத்திடம் இந்தியா பகிர்ந்து கொண்டது.

    காட்டுப்பகுதியில் வேட்டைக்காக சென்றபோது அவர்களை சீன ராணுவம் கடத்தியிருக்கலாம் என்று அவர்களின் குடும்பத்தினர் கருதுகின்றனர். காணாமல் போனவர்களின் பெயர் டோச் சிங்காம், பிரசாத் ரிங்லிங், டோங்டூ எபியா, டனு பேக்கர், என்காரு டிரி என தெரிய வந்துள்ளது.

    அருணாசல பிரதேசத்தை தெற்கு திபெத்தின் அங்கம் என்று சீனா தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது. அந்த மாநிலத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அரசு முறைப்பயணம் மேற்கொண்டபோது, அவரது வருகை, பிராந்திய இறையாண்மையையும் இந்தியாவுடனான பரஸ்பர நம்பிக்கையை குலைப்பது போல உள்ளது என்றும் சீனா தமது எதிர்ப்பை பதிவு செய்தது.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அருணாசல பிரதேசத்தில் பாதுகாப்பு ஆய்வுப் பணியை மேற்கொண்டபோது அவரது வருகையையும் சீனா கடுமையாக ஆட்சேபித்தது.

    கடந்த ஜூன் மாதம் லடாக்கை அடுத்த எல்லை பகுதியில் இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்கள் மோதிக் கொண்ட சம்பவத்தில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். அப்போது முதல் எல்லை விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நீடித்து வருகிறது.

    இரு நாடுகளுக்கு இடையே தீர்க்கப்படாத எல்லைகளாக 3,488 கிலோ மீட்டர் தூரம் உள்ளன. அவற்றை இரு தரப்பும் பரஸ்பரம் கண்காணிக்க முற்படும்போது சில நேரங்களில் மோதல் வெடிக்கிறது.

    இந்த நிலையில் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசிய இந்திய ராணுவ செய்தித்தொடர்பாளர் லெப்டிணன்ட் கர்னல் ஹர்ஷ் வர்தன் பாண்டே, ‘‘இந்தியாவில் இருந்து ஐந்து பேர் எல்லை கடந்து சென்றதாக சந்தேதிக்கப்படும் நிலையில், அவர்களை பிடித்திருந்தால் வழக்கமான நடைமுறைப்படி ஒப்படைக்குமாறு சீன ராணுவத்திடம் கேட்டுக் கொண்டுள்ளோம்’’ என்று தெரிவித்தார்.

    ‘‘எல்லை காடுகளில், இந்தியா எல்லை எது என்றும் சீனாவின் எல்லை எது என்றும் வரையறுக்கப்படவில்லை. இதனால், சில நேரங்களில் காடுகளின் ஆழமான பகுதிகளுக்குச் செல்பவர்கள் வழி தெரியாது சீன பகுதிக்கு செல்லும் சம்பவங்கள் வழக்கமாகவே இருக்கும். சில நாட்களில் அவர்கள் திருப்பி ஒப்படைக்கப்படுவார்கள். இருப்பினும், தற்போதைய சம்பவத்தில் இந்தியர்கள் ஐந்து பேரும் சீன ராணுவம்வசம் உள்ளனரா என்பதற்கான பதிலை சீன ராணுவத்திடம் இருந்து எதிர்பார்க்கிறோம்’’ என்று இந்தி ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
    Next Story
    ×