search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசு
    X
    மத்திய அரசு

    செல்போன் ரீசார்ஜ், மின்விசிறி கடைகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு- மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி

    மின்விசிறி விற்பனை செய்யும் கடைகள், செல்போனுக்கான ரீசார்ஜ் செய்வதற்கான கடைகளை திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.
    புதுடெல்லி:

    கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மார்ச் 25-ந்தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. முதல்கட்டமாக 21 நாட்களுக்கு ஊரடங்குக்கு உத்தரவிடப்பட்டது. அதன் பிறகும் கொரோனாவின் தாக்கம் குறையவில்லை.

    இதையடுத்து ஊரடங்கு உத்தரவை மேலும் 19 நாட்களுக்கு மத்திய அரசு நீடித்தது. தற்போது மே 3-ந்தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த 20-ந்தேதி முதல் ஊரடங்கை தளர்த்தப்போவதாக மத்திய அரசு அறிவித்தது.

    ஆனால் கொரோனா தாக்கம் குறையாததால் ஊரடங்கு தளர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும் மே 3-ந்தேதி வரை தற்போதைய நிலையே நீடிக்கும் என்றும் உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக சிறு தொழில்கள், மளிகைக்கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் 1 மணி வரை அனுமதிக்கப்பட்டு வருகின்றன. மருந்து கடைகள் முழு நேரமும் திறந்து இருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவால் சிறு தொழில்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து சில தொழில்களுக்கு மத்திய அரசு ஊரடங்கில் இருந்து விலக்கு அளித்துள்ளது.

    இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    பாடப்புத்தகம் விற்பனை செய்யும் கடைகள், மின்விசிறி விற்பனை செய்யும் கடைகள், செல்போனுக்கான ரீசார்ஜ் செய்வதற்கான கடைகளை திறக்கலாம். நகர்ப்புறங்களில் உள்ள ரொட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள், மாவு அரைக்கும் நிலையங்கள், பால் பதப்படுத்தும் நிலையங்கள் போன்றவை இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. முதியோர்களுக்கான சேவையில் இருப்பவர்கள் பணி செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

    வேளாண் மற்றும் தோட்டக்கலை தொடர்புடைய ஏற்றுமதி-இறக்குமதி தொடர்பான சேமிப்பகங்கள், வேளாண்- தோட்டக்கலை ஆராய்ச்சி மையங்கள் செயல்படலாம். செடிகள் மற்றும் தேன் வளர்ப்பு தொடர்பான நடவடிக்கைகளை மாநிலத்துக்குள்ளும், மாநிலங்கள் இடையேயும் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

    வனத்துறை அலுவலகங்கள் இயங்கலாம். அனைத்து இடங்களிலும் பணியாளர்கள், ஊழியர்களிடையே சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்திய துறை முகங்களில் வர்த்தக ரீதியிலான கப்பல் போக்குவரத்து ஒரு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×