என் மலர்
செய்திகள்

குடும்பத்தாருடன் மலானி (கண்ணாடி அணிந்திருப்பவர்)
குழந்தைகளை கொன்றுவிட்டு ரெயில் முன் பாய்ந்து தொழிலதிபர் தற்கொலை
டெல்லியில், மன அழுத்தம் காரணமாக தொழிலதிபர் ஒருவர் தனது குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி:
டெல்லியின் ஷாலிமார் பகுதியைச் சேர்ந்தவர் மதுர் மலானி (வயது 44). தொழிலதிபரான இவரது மணர்த்துகள் காகித தொழிற்சாலை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு சில காரணங்களால் மூடப்பட்டது. தொழிற்சாலையை மீண்டும் திறப்பதற்கான முயற்சியில் மலானி ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 6 மாதங்களாக மலானியின் பெற்றோர்கள் ஆதரவில் அவரது குடும்பம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், இன்று காலை சுமார் 7 மணியளவில் மலானியின் குழந்தைகள் இருவரும் அவரது வீட்டில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மலானியின் குழந்தைகளான சமிக்சா (வயது 14) மற்றும் ஷ்ரேயான்ஸ் (வயது 6) ஆகியோரின் உடல்களை கைப்பற்றினர். ஆனால் மலானியை வீட்டில் காணவில்லை.
மலானியின் மனைவி ரூபாலி, தான் மார்கெட்டுக்கு சென்றிருந்ததாகவும், திரும்பி வரும்போது கணவரை காணவில்லை, இரு குழந்தைகளும் இறந்து கிடந்தனர் எனவும் என போலீசாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து மலானியை தேடி போலீசார் விரைந்தனர். ஆனால் ஹெய்டர்பூர் மெட்ரோ ரெயில் நிலையப்பகுதியில் காலை 5.40 மணிக்கே மலானி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டது போலீசாருக்கு தெரிய வந்தது.
‘மலானி தனது தொழிலை மீண்டும் தொடங்கும் முயற்சியில் இருந்த போது, வேலையின்மை மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம். அதனாலேயே அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது’ என டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
மலானியின் குடும்பத்தில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story