என் மலர்
செய்திகள்

ஜிஎஸ்டி
கடந்த மாதத்தின் ஜி.எஸ்.டி. வருமானத்தில் திடீர் சரிவு
ஜூன் மாத நிலவரப்படி மத்திய அரசுக்கு சென்று சேரும் ஜி.எஸ்.டி. வருமானத்தில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லி:
நாட்டின் மிகப்பெரிய வரி சீர்திருத்தமாக கருதப்படும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த வருடம் ஜூலை 1-ம் தேதி நடைமுறைக்கு வந்தது.
இதன்மூலம் ஏற்கனவே நடைமுறையில் இருந்த 30-க்கும் மேற்பட்ட மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டு ஒரே வரி என்ற அடிப்படையில் விதிக்கப்படுகிறது.
இந்த புதிய வரிவிதிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் கடந்த (ஜூன்) மாதத்தில் ஜி.எஸ்.டி. மூலம் மத்திய அரசுக்கு கிடைத்த வருமானம் அதற்கு முந்தைய மே மாதத்தில் கிடைத்ததைவிட 350 கோடி ரூபாய் குறைவாக உள்ளது.

கடந்த மே மாதத்தில் ஒரு லட்சத்து 289 கோடி ரூபாய் கிடைத்த நிலையில் ஜூன் மாதத்தில் 99 ஆயிரத்து 939 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
இந்த 99 ஆயிரத்து 939 கோடி ரூபாயில் மத்திய அரசுக்கு சேர வேண்டிய வரியாக 18,366 கோடி ரூபாயும் மாநில அரசுகளுக்கு சேர வேண்டிய வரியாக 18,366 கோடி ரூபாயும் ஒருங்கிணைந்த வரியாக (இறக்குமதி வரிகள் 21,980 கோடி ரூபாய் உள்பட) 47,772 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது.
செஸ் வரியாக 8,457 கோடி ரூபாய் கிடைத்துள்ளது என மத்திய நிதித்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story