search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    19-ந்தேதி நடைபெறும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்துக்கு தேர்தல் கமிஷன் அனுமதி
    X

    19-ந்தேதி நடைபெறும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்துக்கு தேர்தல் கமிஷன் அனுமதி

    ரியல் எஸ்டேட் துறைக்கான வரி குறைப்பை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்காக 19-ந்தேதி நடத்த திட்டமிட்டு இருந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்துக்கு தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது. #GSTCouncil #ElectionCommission
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் ஒரே சீரான வரி வசூலுக்காக ஜி.எஸ்.டி.யை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த வரி அமலாக்கத்தை சீராக நடத்துவதற்காக ஜி.எஸ்.டி. கவுன்சிலும் அமைக்கப்பட்டது. மத்திய நிதி மந்திரி மற்றும் மாநில நிதி மந்திரிகளை உறுப்பினர்களாக கொண்ட இந்த கவுன்சில், அவ்வப்போது கூடி ஜி.எஸ்.டி. குறித்து விவாதித்து பல்வேறு முடிவுகளை செயல்படுத்தி வருகிறது.

    அந்தவகையில் இந்த கவுன்சிலின் 34-வது கூட்டம் வருகிற 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடத்த தீர்மானிக்கப்பட்டது. ரியல் எஸ்டேட் துறைக்கான வரியை குறைப்பது தொடர்பாக கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து வருகிற கூட்டத்தில் முடிவு செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது.

    கட்டுமானப்பணியில் இருக்கும் வீடுகளுக்கான ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாகவும், குறைந்த விலை வீடுகளுக்கான ஜி.எஸ்.டி. 8 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாகவும் குறைக்க கடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 10-ந்தேதி அறிவிக்கப்பட்டது. இதனால் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ள ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு தேர்தல் கமிஷனின் அனுமதி பெற வேண்டி இருந்தது. ஜி.எஸ்.டி. குறைப்பு உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட வேண்டியிருப்பதால் இந்த ஒப்புதல் அவசியமாகும்.

    எனவே இது தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதை பரிசீலித்த தேர்தல் கமிஷன் 19-ந்தேதி நடைபெற உள்ள ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு அனுமதி அளித்துள்ளது.

    இதைத்தொடர்ந்து இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இது தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் ஜி.எஸ்.டி. கவுன்சில் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த கூட்டம் காணொலி காட்சி மூலம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×