என் மலர்
செய்திகள்

டெல்லியில் சிகிச்சை முடிந்து கோவா திரும்பினார் மனோகர் பாரிக்கர்
கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து கோவா திரும்பினார் என முதல் மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது. #ManoharParrikar
பனாஜி:
கோவா மாநிலத்தில் முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் தலைமையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்துவருகிறது. அந்த கூட்டணியில் கோவா பார்வர்டு கட்சி, மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி மற்றும் மூன்று சுயேட்சைகள் முக்கிய அங்கம் வகித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு முதல்-மந்திரி மனோகர் பாரிக்கருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு மீள முடியாத நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மனோகர் பாரிக்கர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். இடையிடையே உடல் நலக்குறைவு ஏற்பட்டபோது அவர் டெல்லி, மும்பை, பனாஜியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த வாரம் அவர் உடல் நலம் மேலும் பாதிக்கப்பட்டு மூக்கில் ‘டியூப்’ பொருத்தப்பட்ட நிலையில் அவர் கோவா சட்டசபைக்கு வந்து பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கடந்த 31-ம் தேதி முதல்-மந்திரி மனோகர் பாரிக்கரின் உடல் நிலையில் மேலும் பாதிப்பு ஏற்பட்டதால் டெல்லி அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தது. அவரை பா.ஜ.க. மூத்த தலைவர்கள் சிலர் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.
இந்நிலையில், கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து கோவா திரும்பினார் என முதல் மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து முதல் மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், திட்டமிட்டபடி சிகிச்சை முடிந்து டெல்லியில் இருந்து முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் இன்று கோவா திரும்பினார் என தெரிவித்துள்ளது. #ManoharParrikar
Next Story






