search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பசுக்களை தத்தெடுத்தோருக்கு பாராட்டு விழா - ராஜஸ்தான் அரசு அறிவிப்பு
    X

    பசுக்களை தத்தெடுத்தோருக்கு பாராட்டு விழா - ராஜஸ்தான் அரசு அறிவிப்பு

    காங்கிரஸ் தலைமையிலான ராஜஸ்தான் அரசாங்கம், பராமரிப்பில்லாத பசுக்களை தத்தெடுத்தோருக்கு வரும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று பாராட்டு விழாவினை நடத்தவுள்ளது. #RajasthanGovt #StrayCows #DirectorateOfGopalan
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பராமரிப்பற்ற பசுக்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இந்த பசுக்கள் மீட்கப்பட்டு  கோ சாலைகளில் சேர்க்கப்படுகின்றன. இருப்பினும் பல்வேறு பகுதிகளில் பசுக்கள் பராமரிப்பின்றி உள்ளன.

    இந்நிலையில், பசுக்களை பாதுகாக்கும் அரசு அமைப்பான, கோபாலன் இயக்குனரகம், புதிய நடவடிக்கையினை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளது.

    அதில் நன்கொடையாளர்கள், அரசு சாரா அமைப்புகள், சமூக சேவகர்கள் மற்றும் பசு பாதுகாவலர்கள் போன்றோரை பசுக்களை தத்தெடுக்க ஊக்குவிக்க வேண்டும் என்றும், பசுக்களை தத்தெடுத்தோருக்கு ஜனவரி 26 மற்றும் ஆகஸ்டு 15 ஆகிய தேதிகளில் பாராட்டு விழா நடத்தி, கவுரவிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    “கோ சாலைகளில் உள்ள பசுக்களை தத்தெடுத்து அங்கேயே பராமரிக்க விரும்புவோர், அந்தந்த கோ சாலையால் நிர்ணயிக்கப்பட்ட தொகையை செலுத்தலாம். எப்போது வேண்டுமானாலும் அவர்கள் தத்தெடுத்த பசுக்களை பார்வையிட முடியும். மேலும், தத்தெடுத்த மாடுகளை தங்கள் வீடுகளுக்கு அழைத்துச் சென்றும் பராமரிக்கலாம்” என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

    இதுபற்றி கோபாலன் இயக்குனரக இயக்குனர் விஷ்ரம் மீனா கூறுகையில், “மக்களின் ஒத்துழைப்போடு பசுக்களை பாதுகாப்பதே இதன் முக்கிய நோக்கம் ஆகும். சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற விழாக்களில் பராமரிப்பற்ற பசுக்களை தத்தெடுத்தோர் மாவட்ட கலெக்டர்களால் கவுரவிக்கப்பட்டால், மேலும் நல்ல  முயற்சிகளை  மேற்கொள்வார்கள்.

    டிசம்பர் 28 ம் தேதி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கோ சாலைகளில் பராமரிப்பற்ற விலங்குகளை தத்தெடுக்கும் மக்கள் உள்ளனர். அவர்கள் பிறந்த நாள், திருமண நாள் போன்ற நாட்களில், தத்தெடுத்த மாடுகளுடன் சேர்ந்து கொண்டாடுகிறார்கள். இதுபோன்ற பாதுகாப்பாளர்களை ஊக்குவிக்குமாறு நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம்.

    பசுக்களை தத்தெடுக்க விருப்பமுள்ள நபர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் விண்ணப்பங்களை அளிக்கலாம். விருப்பம் தெரிவித்தோரின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர், மாவட்ட ஆட்சியர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்குவார்கள்” என்றார். #RajasthanGovt #StrayCows #DirectorateOfGopalan 
    Next Story
    ×