search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதியில் 1050 அதிநவீன சிசிடிவி கேமரா பொருத்த ஏற்பாடு
    X

    திருப்பதியில் 1050 அதிநவீன சிசிடிவி கேமரா பொருத்த ஏற்பாடு

    திருப்பதி ஏழுமலையான் கோவிலை சுற்றி 1,050 அதிநவீன சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் ரூ.15.79 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளது. #TirupatiTemple
    திருமலை:

    திருப்பதியில் உள்ள அன்னமய்யா பவனில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு ஆலோசனை கூட்டம் தலைவர் சுதாகர் யாதவ் தலைமையில் நடந்தது.

    கூட்டத்திற்கு பின்னர் சுதாகர் யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்காக ரூ. 67.29 கோடி செலவில் 384 அறைகளுடன் கூடிய பக்தர்கள் ஓய்வு அறை வளாகம் திருப்பதி மலை அடிவாரத்தில் இருக்கும் அலிப்பிரியில் கட்டப்பட உள்ளது.


    ஏழுமலையான் கோவிலை சுற்றி 1,050 அதி நவீன சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் ரூ.15.79 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளது.

    திருப்பதி மலையில் சர்வ தரிசன வரிசையில் செல்லும் பக்தர்களுக்காக புதிய வரிசைகள் அமைக்க ரூ. 17.21 கோடி  நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    திருமலையில் ஸ்மார்ட் டேட்டா சென்டர் அமைப்பதற்கு ரூ. 2.63 கோடியும், திருப்பதியில் ஹார்டுவேர் டேட்டா சென்டர் அமைக்க ரூ. 1.97 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் கட்டப்படும் ஏழுமலையான் கோவிலில் ராஜகோபுரம், கண்ணாடி மண்டபம், ஆஞ்சநேயர் சன்னதி, புஷ்கரணி உள்ளிட்ட உள் கட்டமைப்பு வசதிகள் செய்வதற்காக ரூ. 27.29 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    ரூ. 142 கோடியில் அமராவதியில் ஏழுமலையான் கோவில் கட்டப்பட இருக்கும் நிலையில் நான்கு கட்டங்களாக ஒப்பந்ததரார்களிடம் இருந்து ஒப்பந்தம் கோரப்படும்.

    அமராவதியில் ஏழுமலையான் கோவில் கட்டுமானப் பணிக்கு ஜனவரி 31-ந் தேதி முதல்வர் சந்திரபாபு நாயுடு சிறப்பு விருந்தினராக பங்கேற்று பூமி பூஜை செய்ய உள்ளார்.

    தேவஸ்தானத்தில் இருந்து கட்டாய ஓய்வு வழங்கப்பட்ட அர்ச்சகர்களை மீண்டும் பணியில் சேர்ப்பது தொடர்பாக ஆந்திர மாநில அரசு ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது. எனவே அரசு வக்கீலை தேவஸ்தானம் சார்பிலும் மேல்முறையீடு செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை செயல் அலுவலர் சீனிவாசராஜூ, பாஸ்கர் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். #TirupatiTemple
    Next Story
    ×