search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல பொருட்களுக்கு வரி குறைப்பு - ஜிஎஸ்டி குழு கூட்டத்தில் அதிரடி
    X

    பல பொருட்களுக்கு வரி குறைப்பு - ஜிஎஸ்டி குழு கூட்டத்தில் அதிரடி

    32 அங்குலம் கலர் டி.வி., புனித யாத்திரைக்கான விமான கட்டணம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் ஜி.எஸ்.டி. வரிகள் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். #GST #GSTCouncilMeeting
    புதுடெல்லி:

    நாட்டின் மறைமுக வரிகளுக்கு மாற்றாக, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற ஒற்றை வரி, கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு கொண்டுவரப்பட்டது. 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்குகளாக ஜி.எஸ்.டி. வரி சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
     
    வரி விகிதங்களை மாற்றி அமைப்பது குறித்து முடிவெடுக்க மாநில நிதி மந்திரிகள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கவுன்சில் அவ்வப்போது கூடி முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. 

    இதற்கிடையே, மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 31-வது கூட்டம் இன்று காலை டெல்லி விக்யான் பவனில் தொடங்கியது. இந்த கூட்டத்தில், கவுன்சில் உறுப்பினர்களாக உள்ள மாநில நிதி மந்திரிகள் பங்கேற்று தங்கள் மாநிலம் சார்ந்த கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை முன்வைத்தனர். தமிழக அரசின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார்.

    ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கலை எளிமைப்படுத்துவது பற்றியும், சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான தொகையை திரும்ப அளிப்பது பற்றியும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பு தொடர்பான ஆண்டாந்திர கணக்குகளை தாக்கல் செய்யும் இறுதி தேதி மார்ச் 31-க்கு பதிலாக ஜூலை ஒன்றாம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

    மேலும், 33 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை குறைக்கவும் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது. இவற்றில் 7 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதம் ஆக குறைக்கவும், மீதமுள்ள 26 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் ஆக குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

    மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்படும் வாகனங்கள் மற்றும் உபகரணங்களின் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் மீதான வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வங்கிகளின் அடிப்படை சேமிப்பு கணக்கு மற்றும் பிரதமரின் ஜன்தன் யோஜானா வங்கி கணக்குகளுக்கான வரி முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது.



    அனைத்து மதத்தினருக்கான புனித யாத்திரை மற்றும் பக்தி சுற்றுலாவுக்கான விமான கட்டணத்தின் மீதான வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

    32 அங்குலம் அகலத்திலான கலர் டி.வி., கம்ப்யூட்டர் மானிட்டருக்கான வரி 28-லிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. லித்தியம் பேட்டரிகளுக்கான பவர்பேங்க், வாகன டயர்கள் மீதான வரியும் 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 

    இந்த புதிய வரி விகிதம் 1-1-2019 முதல் அமலுக்கு வரும் என மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி  தெரிவித்துள்ளார். இன்றைய கூட்டத்தில் வரி குறைக்கப்பட்ட 23 வகைகளின் மூலம் மட்டும் சுமார் 5500 கோடி ரூபாய் வருமானத்தை அரசு இழக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

    இவை நீங்கலாக மது வகைகள், சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள், சூதாட்டங்கள் தொடர்பான ஆடம்பர விவகாரங்களுக்கான வரி விதிப்பில் எந்த மாற்றமும் இல்லாமல் 28 சதவீதமாகவே தொடரும்.

    இப்படிப்பட்ட ஆடம்பரம் மற்றும் குற்றப் பொருட்களுக்கான பட்டியலில் 28 வகை தொழில்கள் மட்டுமே தற்போது இடம்பெற்றுள்ளன. இதில் வாகன உதிரி பாகங்கள், சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களும் இடம்பெற்றுள்ளன.

    அதிகமாக விற்பனையாகிவரும் இவற்றுக்கு விதிக்கப்படும் வரியை  28-லிருந்து 18 சதவீதமாக குறைத்தால் 33 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பை அரசு சந்திக்க நேரிடும் என்பதால் இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    100 ரூபாய்க்கும் அதிகமான சினிமா டிக்கெட் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கவும், 100 ரூபாய்க்கும் குறைவான சினிமா டிக்கெட் மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

    சினிமா டிக்கெட் கட்டணத்துக்கான வரிகுறைப்புக்கு மும்பையில் உள்ள அனைத்திந்திய சினிமா தயாரிப்பாளர் சம்மேளனம் மகிழ்ச்சியும், வரவேற்பும் தெரிவித்துள்ளது. #GST #GSTCouncilMeeting
    Next Story
    ×