search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்எல்ஏக்கள் தொடர் தர்ணா- கேரள சட்டசபை ஒத்திவைப்பு
    X

    எம்எல்ஏக்கள் தொடர் தர்ணா- கேரள சட்டசபை ஒத்திவைப்பு

    கேரளாவில் எம்எல்ஏக்களின் தர்ணா போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் சட்டசபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. #KeralaAssembly #MLAsIndefiniteDharna
    திருவனந்தபுரம்:

    சபரிமலையில் காவல்துறையின் கெடுபிடிகள் மற்றும் 144 தடை உத்தரவை விலக்கிக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. காவல்துறையின் கெடுபிடிகள் மற்றும் 144 தடை உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் எம்எல்ஏ வி.எஸ்.சிவக்குமார், கேரள காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ பரக்கல் அப்துல்லா ஆகியோர் சட்டசபை வாசலில் காலவரையற்ற தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த விவகாரம் இன்று சட்டசபையில் எதிரொலித்தது. சட்டசபை கூடியதும், கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபரிமலை விவகாரத்தை கிளப்பினர்.



    சபாநாயகர் தலையிட்டு 3 எம்எல்ஏக்களின் தர்ணா போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏக்கள் வலியுறுத்தி கோஷமிட்டனர். சபரிமலையில் பக்தர்களுக்கு முறையான வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். சபாநாயகர் பதில் பேசாமல் மவுனமாக இருந்ததால் அவரை மறைக்கும் அளவிற்கு மிகப்பெரிய பேனர்களையும், பதாகைகளையும் ஏந்தி முழக்கங்கள் எழுப்பினர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. கேள்வி நேரம் முடங்கியது.

    இதன் காரணமாக கேள்வி நேரத்தை ஒத்திவைத்த சபாநாயகர், கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேச அழைத்தார். அத்துடன் இன்று பட்டியலிடப்பட்ட மற்ற அலுவல்களை விரைந்து முடிக்கவும் விரும்பினார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று முழக்கமிட்டதால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். #KeralaAssembly #MLAsIndefiniteDharna
    Next Story
    ×