search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாகனங்களை வழிமறித்து வாலிபர்கள் ‘நில்லு நில்லு’ பாடல் பாடி நடனம் ஆடிய காட்சி.
    X
    வாகனங்களை வழிமறித்து வாலிபர்கள் ‘நில்லு நில்லு’ பாடல் பாடி நடனம் ஆடிய காட்சி.

    நில்லு நில்லு சவால்- வாகனங்களை வழிமறித்து அபாய நடனமாடும் வாலிபர்கள்

    ஓடும் காரில் இருந்து இறங்கி நடனம் ஆடும் கிகி சேலஞ்ச்சின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், இப்போது மிகவும் ஆபத்தான நில்லு நில்லு என்ற புதிய சேலஞ்ச் கேரளாவில் பரவி வருகிறது. #NilluNilluChallenge
    திருவனந்தபுரம்:

    வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் அதை பதிவேற்றம் செய்யும் செயல் தற்போது அதிகரித்து வருகிறது. இவற்றில் சில வீடியோக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளன. ஆனால் பல வீடியோக்கள் விபரீதமாக இருப்பதுதான் பிரச்சனையை ஏற்படுத்திவிடுகிறது.

    அதிலும் வீடியோ பதிவு மூலம் மற்றவர்களுக்கு சவால் விடுவது தற்போது அதிகரித்து வருகிறது. பக்கெட்டில் உள்ள ஐஸ் கட்டிகளை தன்மீது ஊற்றிக் கொண்டு அதை வீடியோ எடுத்து மற்றவர்களையும் அதேபோல செய்யச் சொல்லி பதிவான ‘ஐஸ் பக்கெட் சேலஞ்ச்’ முதலில் சமூக வலைதளங்களில் அதிகளவு பரவியது.

    அதைத்தொடர்ந்து ஓடும் காரில் இருந்து இறங்கி நடனம் ஆடும் ‘கிகி சேலஞ்ச்’ பிரபலமானது. சாதாரணமானவர்கள் முதல் நடிகர், நடிகைகள் வரை ‘கிகி’ நடன சேலஞ்சில் பங்கேற்றதால் இதை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகமானது. ஓடும் காரில் இருந்து இறங்கி நடனம் ஆடும்போது அவர்கள் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளதால் இதை கைவிடும் படி வேண்டுகோள் விடுக்கப்பட்ட பிறகும் அது தொடர்ந்தது.

    இந்த நிலையில் தற்போது கேரளாவில் ‘நில்லு நில்லு சவால்’ என்ற புதிய நடனம் வேகமாக பரவி வருகிறது. சாலையில் செல்லும் வாகனங்களை வழிமறித்து அதன் முன்பு ‘நில்லு நில்லு’ என்று பாட்டுப்பாடி வாலிபர்கள் நடனம் ஆடுகிறார்கள். அதன்பிறகு அதை தங்கள் செல்போன்களில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரவ விட்டு மற்றவர்களையும் இந்த சவாலுக்கு அழைக்கிறார்கள்.

    இருசக்கர வாகனம் முன்பு நடனம் ஆடியவர்கள் தற்போது பஸ், கார், வேன் என்று அனைத்து வாகனங்களையும் வழிமறித்து விபரீத நடனம் ஆடுகிறார்கள். இதன் உச்சகட்டமாக போலீஸ் வாகனங்களையே சிலர் மறித்து நடனம் ஆடும் அளவுக்கு சென்றுவிட்டது.

    கடந்த 2004-ம் ஆண்டு ‘ரெயின் ரெயின் கம் அகைன்’ என்ற மலையாள படம் வெளியானது. இந்த படத்தில் பாடகர் ஜேசிகிப்ட் என்பவர் பாடிய ‘நில்லு நில்லு என்ட நீலக்குயிலே...’ என்ற பாடல் இடம்பெற்று இருந்தது. இந்த பாடல் அப்போது இளைஞர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற பாடலாக திகழ்ந்தது.

    காலப் போக்கில் மறந்துபோன இந்த பாடல் தற்போது மீண்டும் பிரபலமானதற்கு காரணம் மலையாள நடிகர் விஷ்ணு உன்னி கிருஷ்ணன்தான். இவர் தனது புதிய மலையாள படத்தை விளம்பரப்படுத்துவதற்காக ‘நில்லு நில்லு என்ட நீலக்குயிலே...’ என்ற பாடலை பாடி தனது நண்பருடன் நடனம் ஆடி சமீபத்தில் அந்த வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டார்.


    இதைத்தொடர்ந்தே இந்த பாடல் ‘நில்லு நில்லு சவால்’ என்ற பெயரில் தற்போது ஆபத்தான நடனமாக பரவி வருகிறது. வாகனத்தை மறித்து நடனம் ஆடும் வாலிபர்கள் சிலர் தங்கள் கைகளில் கம்பு மற்றும் இலை தழைகளை வைத்துக் கொண்டு வாகனங்களை வழிமறித்து ஆடுகிறார்கள்.

    திடீரென்று இவர்கள் வாகனங்களை மறிப்பதால் அதை எதிர்பாராத வாகன ஓட்டிகள் நிலைதடுமாறுகிறார்கள். நடனம் ஆடுபவர்கள் மீது வாகனங்கள் மோதும் அபாயமும் நிலவுகிறது. சில வாலிபர்கள் உச்சகட்டமாக ரெயில் தண்டவாளத்தில் ரெயில் வரும்போது இந்த நடனத்தை அரங்கேற்றுகிறார்கள். ரெயில் அருகில் வந்ததும் தண்டவாளத்தில் இருந்து குதிக்கிறார்கள். இதுவும் வீடியோவாக பரவி வருகிறது.

    இதுபற்றி கேரள சைபர் கிரைம் போலீசாருக்கு பல்வேறு புகார்கள் சென்ற வண்ணம் உள்ளது. போலீசார் ‘நில்லு நில்லு சவால்’ நடனம் ஆடும் வாலிபர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கைது நடவடிக்கை பாயும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.

    இந்த நடனம் ஆடும் சிலர் தங்களை மற்றவர்கள் அடையாளம் கண்டுபிடிக்காமல் இருக்க ஹெல்மெட்டும் அணிந்து கொண்டு ஆடுகிறார்கள். வீடியோ பதிவு மூலம் இதுபோன்றவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள். #NilluNilluChallenge
    Next Story
    ×