search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாலியல் புகார் கூறிய பெண் பத்திரிகையாளர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் மத்திய மந்திரி
    X

    பாலியல் புகார் கூறிய பெண் பத்திரிகையாளர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் மத்திய மந்திரி

    வெளியுறவுத்துறை இணை மந்திரி எம்.ஜே.அக்பர் மீது பாலியல் புகார் கூறிய பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது அக்பரின் வக்கீல் இன்று டெல்லி கோர்ட்டில் கிரிமினல் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். #MJAkbar #MeToo #PriyaRamani
    புதுடெல்லி:

    பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை “மீடூ” என்ற பெயரில் டுவிட்டர் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அரசியல்வாதிகள், சினிமா துறை பிரபலங்கள் என பலரும் இந்த “மீடூ” இந்தியா ஹேஷ்டேக் தகவல் பகிர்வுகளால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
     
    அவ்வகையில், மீடூ பாலியல் குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரி எம்.ஜே.அக்பரும் ஆளாகியிருக்கிறார். பிரபல பத்திரிகையாளராக இருந்து பா.ஜனதாவில் இணைந்து இப்போது மாநிலங்களவை எம்.பி. மற்றும் இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி என பொறுப்பில் இருக்கும் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்துள்ளனர்.

    அவர் மீதான புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆனால் மத்திய மந்திரி எம்.ஜே. அக்பர் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு எந்த பதிலையும் அளிக்காமல் இருக்கிறார். அவர் விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், அரசுமுறைப் பயணமாக வெளிநாடு சென்றிருந்த அக்பர் நேற்று டெல்லி திரும்பினார்.

    தன்மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நேற்று மாலை அறிக்கை வெளியிட்ட அவர், எனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை, பொய்யாக ஜோடிக்கப்பட்டவை  என குறிப்பிட்டுள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் இப்போது இத்தகைய புகார்கள் எழுப்பப்படுவது ஏன்? என கேள்வி எழுப்பிய அக்பர், அடிப்படை ஆதாரங்களற்ற இந்த குற்றச்சாட்டுகளால் தனது நன்மதிப்புக்கு களங்கம் நேர்ந்துள்ளதாகவும், இதுதொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளை எனது வழக்கறிஞர்கள் மேற்கொள்வார்கள் எனவும் தெரிவித்தார்.



    இதைதொடர்ந்து, அக்பரின் சட்ட ஆலோசனை நிறுவனமான கரன்ஜாவாலா குழுமத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் எம்.ஜே.அக்பர் மீது பாலியல் புகார் கூறிய பெண் பத்திரிகையாளர்களில் ஒருவரான பிரியா ரமணி மீது டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் கிரிமினல் சட்டப்பிரிவுகளின்கீழ் இன்று மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளனர்.  #MJAkbar #MeToo #PriyaRamani
    Next Story
    ×