search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகனுக்கு அசாம் குடியுரிமை கிடைக்காததால் அதிர்ச்சியில் தாய் மரணம்
    X

    மகனுக்கு அசாம் குடியுரிமை கிடைக்காததால் அதிர்ச்சியில் தாய் மரணம்

    உத்தரபிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட மகனுக்கு அசாம் குடியுரிமை கிடைக்காததால் அதிர்ச்சியில் தாய் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #AssamNRC

    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தில் அண்டை நாடான வங்காள தேசத்தில் இருந்து லட்சக்கணக்கானோர் குடியேறி இருக்கிறார்கள். இதனால் யார் உண்மையான இந்தியர்கள், யார் வங்காள தேசத்தினர் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

    எனவே இதை உறுதி செய்வதற்காக தேசிய குடியுரிமை பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதன் இறுதி பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் 40 லட்சம் பேருடைய பெயர் இடம்பெறவில்லை. அதாவது அந்த 40 லட்சம் பேரும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டு உள்ளது.

    ஆனால் இதில் உண்மையான இந்தியர்கள் பலருடைய பெயரும் உள்ளது. கணக்கெடுப்பில் நடந்த குளறுபடி காரணமாக அவர்களும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்று அடையாளம் கண்டுள்ளனர்.

    அவர்களை தற்போது தடுப்பு முகாமில் தங்க வைத்துள்ளனர். இவ்வாறு தின்சுகியா மாவட்டத்தில் தினேஷ் என்பவரையும், அவரது மனைவியையும் இந்தியர்கள் அல்ல எனக்கூறி தடுப்பு முகாமில் தங்க வைத்துள்ளனர்.

    ஆனால் இவர்களுடைய பூர்வீகம் உத்தரபிரதேச மாநிலம் ஆகும். 1945-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் இருந்து தினேசின் தந்தை பரசுராமன், அவரது தாயார் ஜோத்கிதேவி ஆகியோர் அசாமுக்கு குடிபெயர்ந்துள்ளனர். அங்கு தும்சிகா மாவட்டத்தில் விவசாய தொழில் செய்து பிழைத்து வந்தனர். அவர்களுக்கு தினேஷ், ராஜேஷ் என்ற 2 மகன்களும், 3 பெண் குழந்தைகளும் பிறந்தன.

    தற்போது கணக்கெடுப்பு நடந்தபோது தினேசும், அவரது மனைவியும் இதற்கான தீர்ப்பாயத்தில் பங்கேற்று தங்களை பதிவு செய்யவில்லை. இதனால் அவர்களை வெளிநாட்டவராக கருதி தடுப்பு முகாமில் தங்க வைத்தனர்.

    மகனை தடுப்பு முகாமில் தங்க வைத்ததால் தாயார் ஜோத்கிதேவி அதிர்ச்சி அடைந்தார். தினேசுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். அவர்களை இவர் தான் கவனித்து வந்தார். மகனும், மருமகளும் தடுப்பு முகாமுக்கு சென்றதால் மன வேதனையில் அவருக்கு நோய் ஏற்பட்டது. இதனால் அவர் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் அசாமில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கணக்கெடுப்பு குளறுபடியால் உண்மையான இந்திய குடும்பத்தினர் பாதிக்கப்பட்டிருப்பதாக பலரும் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

    அசாமை சேர்ந்த போஜ்பூரி மாணவர் இயக்கமும் ஜோத்கிதேவி மரணத்தை மேற்கோள் காட்டி அரசுக்கு கண்டனத்தை தெரிவித்து உள்ளது. #AssamNRC

    Next Story
    ×