என் மலர்
செய்திகள்

வெள்ளத்தில் பாஸ்போர்ட்களை இழந்தவர்களுக்கு கட்டணமின்றி மாற்று பாஸ்போர்ட் - சுஷ்மா அறிவிப்பு
கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த பாஸ்போர்ட்களுக்கு பதிலாக கட்டணமின்றி மாற்று பாஸ்போர்ட்கள் வழங்கப்படும் என மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் அறிவித்துள்ளார். #Keralafloods #SushmaSwaraj
புதுடெல்லி:
தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளது.
இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழையினால் ஏற்பட்ட, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 37 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். மீட்புப் பணிகளில் ராணுவம், கப்பற்படையினர் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
மாநிலத்தின் பல பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் பல லட்சம் மக்கள் உடுத்திய ஆடைகளுடன் வாழ்வாதாரத்தை தொலைத்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், வெள்ளத்தால் சேதமடைந்த பாஸ்போர்ட்களுக்கு பதிலாக கட்டணமின்றி மாற்று பாஸ்போர்ட்கள் வழங்கப்படும் என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று அறிவித்துள்ளார்.
‘கேரளா மாநிலத்தில் முன் எப்போதும் இல்லாத அளவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் ஏராளமான நாசம் ஏற்பட்டுள்ளது. அங்கு நிலைமை சீரடைந்ததும் வெள்ளநீரில் நனைந்து சேதமடைந்த பாஸ்போர்ட்களுக்கு பதிலாக புதிய பாஸ்போர்ட்களை கட்டணமின்றி வழங்க நாங்கள் தீர்மானித்துள்ளோம்.

தேவை உடையவர்கள் அவர்கள் வசிக்கும் பகுதிகளின் அருகாமையில் இருக்கும் பாஸ்போர்ட் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் சுஷ்மா குறிப்பிட்டுள்ளார். #Keralafloods #Passportsdamagedinflood #SushmaSwaraj
Next Story






